ஐ.பி.எஸ். அதிகாரியான மகளுக்கு கம்பீரமாக போலீஸ் துணை கமிஷனர் அடித்த சல்யூட்

ஐதராபாத்,தனது மகள் ஐ.பி.எஸ். பட்டம் பெற்ற உயர் அதிகாரி என்பதால், சல்யூட் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் போலீஸ் துணை கமிஷனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் மல்காஜ்கிரி என்ற பகுதியில் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வருபவர் உமாமகேஸ்வரா சர்மா. இவர் சப் - இன்ஸ்பெக்டராக போலீஸ் பணியில் சேர்ந்தவர். 30 ஆண்டுகளாக பணியில் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் ஐ.பி.எஸ்., பதவி உயர்வு கிடைத்தது. தற்போது துணை கமிஷனராக பணியாற்றி வருகிறார். அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெற உள்ளார். இவரது மகள் சிந்து சர்மா, கடந்த 2014-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தார். தற்போது தெலுங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார்.
ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் பாதுகாப்பு பணியில் தந்தையும், மகளும் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சொந்த மகள் என்றாலும் உயர் அதிகாரி என்பதால் சல்யூட் அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது உமா மகேஸ்வரா சர்மாவுக்கு. அவரும் கம்பீரமாக சல்யூட் அடித்தார். இதை பார்த்த அனைவரும் அதிசயத்து போயினர்.