சுவர் எழுப்ப அவசர நிலைதான் கடைசி வாய்ப்பு : ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2019      உலகம்
trump 2019 01 11

வாஷிங்டன் : மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு தேவையான நிதியைப் பெற அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவது தனக்கான கடைசி வாய்ப்பு என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெக்சாஸ் மாகாணத்துக்கு பார்வையிடச் சென்ற ட்ரம்ப் கூறியபோது,  ”நாம் எல்லைச் சுவரை உடனே எழுப்ப வேண்டும். ஏனென்றால் இது அனைவருக்கும் தோன்ற கூடிய ஒன்று. இந்தச் சுவர் ஒன்றும் அவ்வளவு விலை உயர்ந்தது அல்ல” என்றார்.

இந்த நிலையில் எல்லைச் சுவர் அமைப்பது குறித்து பேசும்போது, ”மெக்சிகோ எல்லையில் 5.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள எல்லைச் சுவர் எழுப்ப ஜனநாயகக் கட்சியினர் அனுமதிக்கவில்லை. அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவதுதான் கடைசி வாய்ப்பு” என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

முன்னதாக, அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புக்கு வழி செய்யும் வகையிலும் சுவர் எழுப்ப அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டார். இதற்காக 500 கோடி டாலர் நிதி ஒதுக்கக் கோரினார்.

ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபர் ட்ரம்ப்பின் கோரிக்கைக்கு ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் செவி சாய்க்கவில்லை. அதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். இதனால், இந்த நிதியாண்டுக்குச் செலவீனத்துக்கான நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க இரு அவைகளிலும் இருந்த ஜனநாயகக் கட்சியினர் மறுத்துவிட்டனர்.

இதனால் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஷட்டவுன் தொடங்கி 3 வாரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியமின்றிப் பணியாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில்   மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவது தொடர்பாக ஜனநாயகக் கட்சியினருடன்  ட்ரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து