மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா மதுரையில் கொடியேற்றத்துடன் இன்று கோலாகல துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2019      ஆன்மிகம்
Madurai-Meenakshi temple 2019 02 02

மதுரை, சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று கோலாகலமாக துவங்குகிறது. வரும் 15-ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாதந்தோறும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதிலும் சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் தொடக்கமாக வாஸ்து சாந்தி எனும் நிலத்தேவர் வழிபாடு நேற்று நடந்தது. இன்று கொடியேற்றத்துடன் துவங்கும் இந்த சித்திரை திருவிழா வரும் 19-ம் தேதி வரை நடக்கிறது.

இன்று கொடியேற்றம்

திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை 10.05 மணிக்கு மேல் 10.29 மணிக்குள் மிதுன லக்னத்தில் சாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது. அப்போது அங்கு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் எழுந்தருள்வார்கள். பின்னர் அவர்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். விழாவையொட்டி தினமும் காலை, மாலை என இரு வேளையும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளையும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

15-ல் பட்டாபிஷேகம்

மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் வரும் 15-ம் தேதி அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 8 மணிக்கு நடக்கிறது. 16-ம் தேதி திக்விஜயமும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் வரும் 17-ம் தேதி காலை 9.50 மணிக்கு மேல் 10.14 மணிக்குள் வடக்கு, மேற்கு ஆடிவீதியில் உள்ள மண்டபத்தில் நடக்கிறது. திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக பந்தல் அமைக்கும் பணி தற்போது ஆடி வீதிகளில் நடந்து வருகிறது. சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தை காணும் வகையில் பந்தல் அமைக்கப்படுகிறது. 18-ம் தேதி தேரோட்டமும், 19-ம் தேதி தீர்த்தவாரி மற்றும் தேவேந்திர பூஜையுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்  சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. திருக்கல்யாணத்தை காணும் பக்தர்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

தக்கார் கருமுத்து கண்ணன்

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். இதற்கிடையே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலிலும் சித்திரை திருவிழா வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் 19-ம் தேதி நடக்கிறது. மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறும் 18-ம் தேதிதான் தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து