மாணிக்க மூக்குத்தி மீனாட்சிக்கு மதுரையில் இன்று முகூர்த்த நாள்: நாளை மாசி வீதிகளில் தேரோட்டம்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      ஆன்மிகம்
MEENAKSHI copy

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து காலை, இரவு வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். திருவிழா தொடங்கிய நாளில் இருந்து மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது. நாள்தோறும் சுவாமி ஊர்வலத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாசி வீதிகளில் திரண்டு வந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.

பட்டாபிஷேகம்

நேற்று முன்தினம் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. கோவில் அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் நடந்த இந்த விழாவில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ராமர் கிரீடம் சூட்டப்பட்டு செங்கோல் வழங்கி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். பட்டாபிஷேகம் சூட்டப்பட்டதில் இருந்து ஜனவரி மாதம் வரை 4 மாதங்களுக்கு மதுரையில் மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குகிறது என்பது ஐதீகம்.

திருக்கல்யாணம்

நேற்று திருவிழாவின் 9-ம் நாளை முன்னிட்டு காலையில் மரவர்ண சப்பரத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தனர். மாலையில் இந்திர விமானத்தில் சுவாமி, அம்மன் 4 மாசி வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்போது மீனாட்சி அம்மன் திக்விஜய லீலை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது.

அதிகாலை 4 மணிக்கு சுவாமி, அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் உலா வருகின்றனர். பின்னர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கின்றனர். தொடர்ந்து காலை 9 மணி முதல் 10.14 மணிக்குள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடக்கிறது. இரவு யானை வாகனம், ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர்.

நாளை தேரோட்டம்

திருக்கல்யாண நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சிகளை காண்பதற்காக சித்திரை வீதிகள், ஜான்சிராணி பூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருக்கல்யாணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்படும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து  கொண்டு உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக திருக்கல்யாணம் முடிந்த பிறகு பெண்கள் தங்கள் மங்கள நாணை(தாலி) மாற்றிக் கொள்வார்கள். நாளை மதுரை மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். இந்த தேர் மாசி வீதிகளில் வலம் வந்து பின்னர் தேர் நிலையை சென்றடையும். இத்துடன் மதுரை சித்திரை திருவிழா நிறைவுக்கு வரும்.
 
அழகர் வருவார்

அதன் பிறகு கள்ளழகர் திருவிழா தொடங்கும். இதையொட்டி அழகர் மலையில் இருந்து புறப்பட்டு மதுரை நோக்கி வருவார். அவருக்கு வழியெங்கும் பக்தர்கள் எதிர்சேவை செய்து உற்சாகத்துடன் வரவேற்பார்கள். எதிர்சேவை முடிந்ததும் வழக்கப்படி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பிறகு அவர் வண்டியூர் புறப்பட்டு செல்வார். அங்கு வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அதை தொடர்ந்து மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்த பின் அழகர் தனது இருப்பிடமான அழகர்மலைக்கு புறப்பட்டு செல்வார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து