அரஹர சங்கர, மீனாட்சி சுந்தர கோஷத்துடன் மதுரை மாசி வீதிகளில் ஆடி அசைந்து வலம் வந்த மீனாட்சி - சொக்கநாதர் தேர் - வைகை ஆற்றில் இன்று அழகர் இறங்குகிறார்

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019      ஆன்மிகம்
Meenakshi - Chokkanathar Chariot 2019 04 18

மதுரை : அரஹர சங்கர, மீனாட்சி சுந்தர கோஷத்துடன் மதுரை மாசி வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் இடையே மதுரை மீனாட்சி அம்மன் தேர் பவனி வந்தது. இந்த நிலையில் நேற்று மதுரை தல்லாகுளம் பகுதியில் மதுரை வரும் அழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து இன்று காலை அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 

சைவமும், வைணவமும் இணையும் வகையில் கொண்டாடப்படும் விழா மதுரை சித்திரை திருவிழாவாகும். மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது என 15 நாட்கள் ஆண்டுதோறும் மதுரையில் இந்த விழா களைகட்டி காணப்படும். சித்திரை திருவிழாவை காண்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆண்டுதோறும் திரள்வது உண்டு. இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் -சுந்தரேசுவரர் சித்திரை திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து தினமும் காலை, இரவு வேளைகளில் சுவாமி - அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தனர். இரவில் நடைபெற்ற சுவாமி ஊர்வலத்தின் போது சிறுவர், சிறுமியர் மீனாட்சி, சொக்கநாதர் மற்றும் கடவுள்கள் வேடங்களில் வந்து ஆடிப்பாடி செல்வதை காண மாசிவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம், திருக்கல்யாணம் போன்றவை விமரிசையாக நடைபெற்றது. இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு புது மங்கள நாண் சூட்டிக் கொண்டனர். இதையடுத்து கோவில் சார்பில் நடைபெற்ற திருமண விருந்து நிகழ்ச்சியிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. முதலில் விநாயகர், முருகப் பெருமான் தேர்கள் இழுக்கப்பட்டன. காலை 4.30 மணிக்கு பிரியாவிடையுடன் சொக்கநாதர் பெரிய தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து மீனாட்சி அம்மன் சிறிய தேருக்கு எழுந்தருளினார். காலை 5.45 மணிக்கு மாவட்ட கலெக்டர் நடராஜன், கோவில் தக்கார் கருமுத்துகண்ணன், இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாயா, அரஹர சங்கர, மீனாட்சி சுந்தர என்ற பக்தி கோ‌ஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 4 மாசி வீதிகளிலும் சுவாமி - அம்மன் தேர்கள் ஆடி அசைந்து வலம் வந்ததை காண ஏராளமான பக்தர்கள் குழந்தைகளுடன் வீதிகளில் திரண்டிருந்தனர்.

தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட கோவில் யானை மற்றும் காளைகள் வலம் வந்தன. இதனை கண்டு சிறுவர் - சிறுமிகள் உற்சாகம் அடைந்தனர். இளைஞர்கள் ஆர்வத்துடன் வடங்களை பிடித்து தேரை இழுத்தனர்.  பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த தேர்கள் கீழமாசி வீதியில் உள்ள நிலையை அடைந்ததும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

சுவாமி -அம்மன் தேர்களுக்கு பின்னால் சண்டிகேஷ்வரர், பஞ்சமூர்த்திகள் சப்பரங்களில் வீதிஉலா வந்தனர். மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவை தொடர்ந்து இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடை பெறுகிறது. இதற்காக அழகர்மலையில் இருந்து கள்ளழகர் நேற்று முன்தினம் மதுரை நோக்கி புறப்பட்டார். அவருக்கு வழிநெடுக பல்வேறு மண்டகப்படிகளில் பக்தர்கள் திரண்டு வரவேற்பு கொடுத்தனர். நேற்று மாலை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடந்தது. இன்று அதிகாலை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால்  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து