கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தல்: 8 மாநிலங்களில் 50 தொகுதிகளில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது

வியாழக்கிழமை, 16 மே 2019      இந்தியா
parliament 2018 10 14

புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலுக்கான கடைசி கட்ட (7-வது கட்ட) தேர்தலில் 9 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 50 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 11-ம் தேதி தொடங்கியது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. முதல் கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி 91 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி 96 தொகுதிகளுக்கும், 3-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி 115 தொகுதிகளுக்கும், 4-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி 71 தொகுதிகளுக்கும் நடைபெற்றது. கடந்த 6-ம் தேதி 51 தொகுதிகளுக்கு 5-வது கட்ட தேர்தலும், 12-ம் தேதி 59 தொகுதிகளுக்கு 6-வது கட்ட தேர்தலும் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து 7-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் 8 மாநிலங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. 7-வது கட்ட தேர்தலில் பீகார் (8), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்காளம் (9), சத்தீஸ்கர் (1), உத்தரபிரதேசம் (13), இமாச்சலபிரதேசம் (4) ஆகிய 8 மாநிலங்களில் இருக்கும் 59 தொகுதிகளுக்கு வருகிற 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி 59 தொகுதிகளிலும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த 59 தொகுதிகளில் மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்குள்ள 9 தொகுதிகளில் நேற்றிரவு 10 மணிக்கு தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள 50 தொகுதிகளில் இன்று மாலை தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது.

7-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 59 தொகுதிகளில் வாரணாசி, பாட்னா சாகிப், சண்டிகர், இந்தூர், அமிர்தசரஸ், கோரக்பூர், காசியாப்பூர் ஆகிய தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளாகும். இந்த தொகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

7-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 சதவீதம் பேர் மீது அதாவது 170 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளன. 12 பேர் மீது கொலை வழக்கும், 34 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. 20 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன. 7-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 29 சதவீதம் பேர் கோடீசுவரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 7-வது கட்ட தேர்தலில் அதிக பணப்பட்டுவாடா நடப்பதாக புகார்கள் குவிந்துள்ளன. இதைத் தடுக்க இன்று  பிரசாரம் முடிந்ததும் கண்காணிப்பை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 19-ம் தேதி தேர்தல் முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து