எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 23 மே 2019      விளையாட்டு
kohli-tendulkar 2019 05 23

மும்பை : விராட் கோலி மட்டும் சரியாக விளையாடினால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

30-ம் தேதி தொடக்கம்...

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர். இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை ஜூன் 5ஆம் தேதி எதிர்கொள்கிறது.

ஒத்துழைப்பு இல்லாமல்...

இந்நிலையில், விராட் கோலி மட்டும் சரியாக விளையாடினால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது, மற்ற வீரர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். பிடிஐ-க்கு சச்சின் அளித்த பேட்டியில், “ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு போட்டியில் ஜொலிப்பார்கள். ஆனால், அணியிலுள்ள பெரும்பாலானோரின் ஒத்துழைப்பு இல்லாமல் பெரிய அளவில் வெற்றிபெற முடியாது.        

தனக்கு ஏற்பட்ட...

ஒரு தனிப்பட்ட வீரர்களின் திறமையால் மட்டும், தொடரை வென்றுவிட முடியாது. மற்றவர்களும் தங்களது பங்களிப்பை முக்கியமான நேரங்களில் அளிக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால், ஏமாற்றம்தான் மிஞ்சும். மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் 1996, 1999 மற்றும் 2003 உலகக் கோப்பையில் தனக்கு ஏற்பட்ட சுமைபோல் விராட் கோலிக்கு ஏற்பட்டுவிடும்.

சூழ்நிலையை புரிந்து...

நம்மிடையே சிறந்த பேட்ஸ்மேன்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நெம்பர் 4 என்பது வெறும் எண் மட்டும்தான். வீரர்களை மாற்றி மாற்றி களமிறக்கி கொள்ளலாம். அது முக்கியமான பிரச்னை என நான் நினைக்கவில்லை. நம்முடைய வீரர்கள் நிறைய போட்டிகளில் விளையாடியிருக்கிறார்கள். 4,6 அல்லது 8 என எந்த இடத்தில் இறங்கினாலும் விளையாடுவார்கள். சூழ்நிலையை புரிந்து கொண்டு விளையாடுவதுதான் முக்கியம்.

அனுபவம் வாய்ந்த...

நம்முடைய அணியில் 8-10 வருடம் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். அதேபோல், குல்தீப், சாஹல், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா போன்ற திறமைவாய்ந்த இளம் வீரர்கள் இருக்கிறார்கள். உலகக் கோப்பையை வெல்ல நமக்கு அதிக வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து