நடிகர் சங்க தலைவர் தேர்தல்: நாசர், பாக்யராஜ் வேட்பு மனு

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2019      சினிமா
Bhagyaraj-Nasser 2019 06 09

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிட ஒரே நாளில் நாசர், பாக்யராஜ் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த தேர்தலில் வென்ற நிர்வாகிகளின் பதவி காலம் கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் தேர்தலை ஆறு மாதத்திற்கு தள்ளி வைத்தனர். தற்போது தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். வருகிற 23-ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தொடங்கியது. மனு தாக்கல் செய்ய இன்று 10-ம் தேதி கடைசி நாள் ஆகும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை 14-ம் தேதி வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை வெளியிடப்படும்.

இந்த தேர்தலில் நடிகர் விஷாலின் பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. இந்த அணியின் சார்பில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். இதே போல் கார்த்தி பொருளாளர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார். ஏற்கனவே துணைத் தலைவராக இருந்த பொன்வண்ணன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. துணைத் தலைவர் பதவிகளுக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த அணியின் சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் 2-வது முறையாக தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார் நாசர். அதனை தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் நாசர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பாண்டவர் அணி சார்பில் பணம் என்பது விளையாடாது. எங்களுக்கு மிரட்டல் ஏதும் வரவில்லை. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு என்பது கிடையாது என்றார்.

இந்த அணியை எதிர்த்து யார், யார் போட்டியிடுவார்கள் என்பது தெரியாமல் இருந்தது. நாசர் தலைவராகவும், விஷால் பொதுச் செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. இந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. விஷால் அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையில் புதிய அணி களம் இறங்குகிறது. நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக பாக்யராஜ் அறிவித்தார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு உதயா, குட்டி பத்மினி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிட நடிகர் பாக்யராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து