பள்ளிக் குழந்தைகளுக்கு பந்துவீசிய விராட் கோலி

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2019      விளையாட்டு
Kholi bowled 2019 06 21

Source: provided

இங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரம் செலவிட்டனர். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருக்கும் அணி வீரர்கள் பள்ளி குழந்தைகளை சந்திக்கும் கிரிக்கெட் கிளீனிக் என்ற நிகழ்ச்சியை ஐசிசி நடத்தி வருகிறது. அதன்படி சவுத்தாம்டனில் உள்ள ஹாம்ஸ்பியர் பவுல் மைதானத்தில் 30 பள்ளி குழந்தைகளுடன் இந்திய அணி வீரர்களான விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் நேரம் செலவிட்டனர். அப்போது கேப்டன் விராட் கோலி குழந்தைகளுக்கு பந்துவீசினார். பின்னர் பேசிய கோலி, குழந்தைகளின் வாழ்க்கையில் கிரிக்கெட் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தான் நம்புவதாக கூறினார்.
____________

பாகிஸ்தான் வீரர் ட்விட்டால் சர்ச்சை

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப்பின் பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், உலகக்கோப்பையை வெல்லவும் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதைக்கண்ட பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஹசன் அலி, உங்கள் விருப்பம் நிறைவேறட்டும். அதற்கு வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இவரின் இந்த ட்விட் பாகிஸ்தான் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், ட்விட் போட்ட சில நிமிடங்களிலேயே அதை அவர் நீக்கி விட்டார். இருப்பினும் ஒரு பாகிஸ்தான் வீரராக இருந்து கொண்டு, எப்படி இப்படி சொல்ல முடிகிறது என்று தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்திய அணிக்கெதிரான போட்டியில் 9 ஓவர்கள் வீசிய ஹசன் அலி 89 ஓட்டங்கள் வாரி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
____________

கில்கிறிஸ்ட் சாதனையை  சமன் செய்தார் வார்னர் !

நாட்டிங்காமில் நடந்த ஆட்டத்தில் வங்காள தேசத்தை 48 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 381 ரன் குவித்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 147 பந்தில் 166 ரன் எடுத்தார். இதில் 14 பவுண்டரி, 5 சிக்கர்கள் அடங்கும். பின்னர் விளையாடிய வங்காள தேசம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 333 ரன் எடுத்தது. இந்த அணியில் முஷ்பிகுர் ரஹிம் சதம் (102 ரன்) அடித்தார்.  வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் அடித்தது அவரது 16-வது சதமாகும். இதன் மூலம் அவர் ஆஸ்திரேலிய வீரர்களில் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை சமன் செய்தார். இருவரும் 3-வது இடத்தில் உள்ளனர். 29 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் முதலிடத்திலும், 2-வது இடத்தில் மார்க் வாக்கும் (18 சதம்) உள்ளனர். டேவிட் வார்னர் 110-வது இன்னிங்சில் 16-வது சதத்தை தொட்டார். இந்திய கேப்டன் விராட் கோலியும் தனது 16-வது சதத்தை 110-வது இன்னிங்சில்தான் அடித்தார். ஒட்டு மொத்தமாக டேவிட் வார்னர் 14-வது இடத்தில் உள்ளார்.
____________

தவானுக்காக வருத்தப்பட்ட சச்சின் டெண்டுல்கர்

உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ஷிகர் தவான் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்வுப்பூர்வமான வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனையடுத்து தவானுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டரில், ‘அன்பிற்குரிய தவான், ஆடுகளம்தான் உங்களை மிஸ் செய்ய இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  விரைவில் நீங்கள் குணம் அடைவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மீண்டும் நீங்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கு திரும்பி, இந்தியாவின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும்’ என பதிவிட்டார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக இருக்கும் சச்சின் டெண்டுல்கர் உருக்கமான பதிவினை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இதில் சச்சின் கூறுகையில், ‘ஷிகர், நான் உங்களுக்காக மிகவும் வருந்துகிறேன். நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள். முக்கியமான சமயத்தில் உங்களுக்கு ஏற்பட்ட காயம் என் இதயத்தை நொறுக்கிவிட்டது.  நீங்கள் நிச்சயம் மீண்டு வருவீர்கள். உங்கள் திறமையை நிரூபிக்க மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள்’ என உருக்கமாக கூறியுள்ளார்.
____________

பாக். அணியில் ஓரங்கட்டப்பட்ட வீரர் இம்ரான் கானிடம் கோரிக்கை

உலககோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வரும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. மோசமான பேட்டிங், பவுலிங் என்று சகல விதத்திலும் அந்த அணி சொதப்பியது. மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிந்தும் டாஸ் வென்று பீல்டிங் செய்தது அணியின் கேப்டன் சர்பராஸை விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிரதமருமான இம்ரான் கான், டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும் என்று போட்டிக்கு முன்னதாக கூறியிருந்த நிலையில், சர்பராஸின் முடிவு வேறு விதமாக இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓரங்கட்டப்பட்ட வீரரான கம்ரான் அக்மல், அணி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். “உலகக்கோப்பை தொடரில் முதலில் பவுலிங் செய்த எந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அதிக ரன்களை குவித்து வெற்றி பெற்றது. எனினும், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றும் சர்பராஸ் பீல்டிங் தேர்வு செய்துள்ளார். நான் பிரதமர் இம்ரான் கானுக்கு கேட்டுக்கொள்வது, அணிக்காக விளையாட உண்மையான திறனுடன் ஏராளமான வீரர்கள் தயாராக உள்ளனர். மெரிட் அடிப்படையில் வீரர்கள் தேர்வு நடந்தால் பாகிஸ்தான் அணி சிறந்த இடத்துக்கு செல்வது உறுதி” என்று கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.
____________

தவான் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பில்லை - மைக்கேல் ஹசி

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர் ஷிகர் தவானுக்கு ஆஸ்திரேலியாவுடனான போட்டியின் போது இடது கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இவர் அந்தப் போட்டியில் ஃபீல்டிங் செய்ய வரவில்லை. இதனைத் தொடர்ந்து ஷிகர் தவானுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவரது கைவிரல் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதன் காரணமாக ஷிகர் தவான் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் ஷிகர் தவான் உலகக் கோப்பையிலிருந்து விலகியது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தவான் உலகக் கோப்பையிலிருந்து விலகியது இந்திய அணிக்கு பெரிய அளவில் பாதிப்பாக இருக்காது. இந்திய அணியில் தவானின் இடத்தை நிரப்ப திறமையான வீரர்கள் உள்ளனர். எனவே இந்திய அணியின் உலகக் கோப்பை பயணத்தில் தவான் இல்லாதது எந்தவித தொய்வும் ஏற்படுத்தாது. இந்திய அணியிலுள்ள வீரர்களின் திறமையை வைத்து பார்க்கும் போது இந்திய அணி இறுதி வரை செல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.
_____________

குளோபல் டி20 தொடரில்  யுவராஜ் சிங் ஒப்பந்தம் !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் இவர் அறிவித்திருந்தார். அப்போது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டு வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளதாக அவர் கூறியிருந்தார். அதற்கு அனுமதி அளிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அவர் சமீபத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கு வாரியம் பதில் ஏதும் அனுப்பவில்லை. யுவராஜ் சிங் ஓய்வு பெற்றுவிட்டதால், இந்த அனுமதி தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கனடாவில் நடக்கும் ’குளோபல் டி20’ தொடரில் விளையாட யுவராஜ் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் ஒவ்வொரு அணியிலும் தலா நான்கு கனடா வீரர்களும் இடம் பெறுவார்கள். இந்த தொடரின் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் 25ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் ‘டொரண்டோ நேஷனல்ஸ்’ அணிக்காக விளையாட யுவராஜ் சிங் ஒப்பந் தமாகியுள்ளார். இதை குளோபல் டி20 கனடா தனது அதிகாரப் பூர்வ ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
____________

வார்னரின் செல்லப் பெயர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஃபார்மில் இருக்கிறார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர், 89.40 சராசரியில் 447 ரன்கள் எடுத்துள்ளார். வங்காள தேசத்திற்கு எதிராக நடந்த போட்டியில் 166 ரன்களை வார்னர் குவித்தார்.  இதனால் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.  2019 உலக கோப்பையில் இதுவே அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் ஆகும்.  இது குறித்து வார்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
எனது அணியினர் என்னை இப்போதெல்லாம் ‘Hum-Bull' (Humble- அமைதி Bull-காளை) என அழைக்கின்றனர்.  கடந்த 2 ஆண்டுகளாக நான் நல்ல முறையில் நடந்து கொள்வதால் இப்படிச் செல்லமாக அழைக்கின்றனர். நான் வாழ்க்கையிலும், கிரிக்கெட்டிலும் கோபமாக நடந்துக் கொள்ள முடியாத சூழலில் இருக்கிறேன்.
____________

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து