அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் பலி - கம்போடியாவில் சீனப் பெண் கைது

நாம்பென் : கம்போடியாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
கம்போடியா நாட்டின் சிஹானவ்க்வில்லே என்ற இடத்தில், ஒரு சீன நிறுவனத்துக்காக 7 மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு கட்டுமானப்பணி நடந்து கொண்டிருந்த போது, அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில், கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அலறித் துடித்தனர்.உடனடியாக சம்பவ இடத்தில் பொக்லைன் எந்திரங்களுடன் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்து விட்டனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் இடிபாடுகளுக்கு மத்தியில் இன்னும் பலர் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. சம்பவ இடத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் பலரை காணவில்லை என அந்த நாட்டின் தகவல் துறை மந்திரி கியு கன்ஹரித் கூறி உள்ளார். கட்டிடம் இடிந்து விழுந்ததின் காரணம் என்ன என்பது உடனடியாக தெரிய வரவில்லை. இது தொடர்பாக ஒரு சீனப் பெண் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கூறினர்.