582 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் ரூ.5.82 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      தமிழகம்
cm edapadi 2019 03 03

582 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள், 5.82 கோடி ரூபாய் செலவில் புதிதாக துவக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

கூட்டுறவு நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு நவீன வசதிகளுடன் சிறந்த சேவையினை வழங்குவதற்காக 113 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 7 மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகள், பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஒரு நகரக் கூட்டுறவுக் கடன் சங்கம் ஆக மொத்தம் 125 கூட்டுறவு நிறுவனங்களுக்கு 36.41 கோடி ரூபாய் செலவில் சொந்தக் கட்டிடங்கள் கட்டப்படும். கூட்டுறவு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு நவீன வசதிகளுடன் புதுப்பொலிவுடன் சேவை அளிக்க ஏதுவாக 118 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 17 மத்தியக் கூட்டுறவு வங்கிகள், 4 நகரக் கூட்டுறவு வங்கிகள், 3 நகரக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 2 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆக மொத்தம் 143 கூட்டுறவு நிறுவனங்கள் 24.91 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்படும்.

சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலக கட்டிடம், மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்கிடும் பொருட்டு, 8.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும். தரமான நுகர்பொருட்களை நியாயமான விலையில் வழங்கிடவும், பண்டகசாலைகளின் இதர சேவைகளை பொதுமக்கள் மற்றும் நுகர்வோருக்கு அளித்திடவும், அரியலூர், புதுக்கோட்டை, தேனி, கன்னியாகுமரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மண்டலங்களில் 5 மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் புதிதாக துவக்கப்படும்.

ஒரு புதிய முயற்சியாகவும், நியாய விலைக் கடைகளின் குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையிலும், மாநிலம் முழுவதும் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் 103 நியாயவிலைக் கடைகளில் திறக்கப்பட்டன. இவ்வாறு திறக்கப்பட்ட கடைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும், அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் அனைத்திலும் மக்களின் அன்றாட தேவையான 300 வகையான பொருட்கள், அதிகபட்ச சில்லறை விலையில் இருந்து. 5 சதவீதத்துக்கு குறைவான விலையில் விற்பனை செய்யப்படுவதால் மக்களின் வரவேற்பினை பெற்றுள்ளது. இத்தகைய சீரிய திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தி 582 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள், 5.82 கோடி ரூபாய் செலவில் புதிதாக துவக்கப்படும். விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 142 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 12 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவுடைய 135 கிடங்குகளும், 500 மெட்ரிக் டன் கொள்ளளவுடைய 20 கிடங்குகளும், 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவுடைய 7 கிடங்குகளும், 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவுடைய 3 கிடங்குகளும் ஆக மொத்தம் 36,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 149 கிடங்குகள் நடப்பாண்டில் 39.37 கோடி ரூபாய் செலவில் புதியதாக கட்டப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து