முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரியில் இருந்து வினாடிக்கு 7,000 கனஅடி நீர் திறப்பு

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 7,000 கனஅடி நீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 6,000 கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  காவிரி நீர் பிரச்னையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் அமைந்துள்ளது. அதே நேரம் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பெங்களூருவில் இயங்குகிறது. கடந்த ஜூலை மாதம் 25-ல் காவிரி ஒழுங்காற்று குழுவின் 10-வது கூட்டம் டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் கடந்த மாதம் கர்நாடக மற்றும் தமிழக அணைகளின் நீர்மட்டம் குறித்து பரிசீலனை நடந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான காவிரி நீர் முறைப்படுத்தும் கூட்டம் பெங்களூருவில் நடந்தது.

இந்த கூட்டத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துள்ள மழை அளவு, தற்போது அணைகளில் இருக்கும் நீர் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலத்திற்கு காவிரி நீர் எவ்வளவு திறந்து விடப்பட்டுள்ளது? இன்னும் எவ்வளவு நீர் திறந்து விடவேண்டும் என்பது குறித்து காவிரி ஒழுங்காற்று குழு உறுப்பினர்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டது.  மேலும் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்கள் தண்ணீர் திறந்து விடுவது என்று பெங்களூருவில் நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று தமிழகத்துக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 7,000 கனஅடி நீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 6,000 கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து