தமிழகத்தில் பவானி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019      தமிழகம்
cm edapadi speech chennai function 2019 09 15

சென்னை : தமிழகத்தில் உள்ள பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ஈஷா யோகா மையத்தின் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மரம் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.

ஈஷா யோகா மையத்தின் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் மரம் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,  

நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பது பழமொழி. நாம் அனைவரும் நிழலின் அருமையை உணர்ந்துள்ள இவ்வேளையில், நிழலினை உருவாக்க மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதும், நிழல் தரும் மரங்களைக் காப்பதும் நம் அனைவரின் கடமையாகும்.  மரங்களால் சுவாசக் காற்று அதிகரிக்கின்றது, நில அரிப்பு தடுக்கப்படுகின்றது. மழை மாதந்தோறும் பொழிவதற்கு மண்ணின் மீதுள்ள மரங்களே அழைத்திடுகிறது. மரம் நடுவோம்! மழை பெறுவோம்!  என்ற வாசகம் நாம் அனைவரும் அறிந்ததே, மரங்கள் மழை கொடுக்க வேண்டுமென்றால் நமக்குத் தேவை காடுகள். காடுகள் மனிதர்களால் உருவாக்கப்படுவதில்லை, மனிதன் நட்ட மரங்களைவிட மண்ணே நட்ட மரங்களே அதிகம். கரங்கள் நட்ட மரங்களைவிட காற்றே நட்ட மரங்களே அதிகம். ஒற்றை மரம், ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 300 லிட்டர்கள் வரை தண்ணீரைத் தன்னுடைய வியர்வையாக வெளியேற்றுகிறது. மரங்கள் தங்களது தேவையான நீரைவிடப் பல மடங்கு அதிகமான நீரை  உறிஞ்சிக் கொள்ளும். அந்த உபரி நீர் அவ்வளவும் வெளியாகி ஈரப்பதமாக காற்றில் கலந்து விடுகிறது. அந்த உபரி நீர்தான் காற்றைக் குளிர்வித்து நம்மையும் குளிர்விக்கின்றன. அந்த உபரி நீரை  கொண்டுதான் மேகங்களும் நமக்கு மழையை கொடுக்கின்றன.

இந்தியத் திருநாட்டின் கலாச்சாரத்தில் மரம் ஒரு இன்றியமையாத பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, நாம் வேப்ப மரத்தினை மாரியம்மன் தெய்வத்தினோடும், அரச மரத்தினை விநாயகப் பெருமானோடும் எப்பொழுதும் இணைத்து வழிபடுவது வழக்கம். இன்றும் பல்வேறு பழங்குடியின மக்களின் சடங்குகளில், குறிப்பாக திருமண சடங்குகளில் மரத்தினை வணங்கி திருமணத்தை நடத்துவது வழக்கமாக கடைபிடிக்கப்படுகின்றது. மருது சகோதரர்கள் நினைவாக மரங்கள் இரண்டினை வளர்த்து வந்த ஓர் பெரியவர், அம்மரங்களை அரசரே ஆணையிட்டும் வெட்ட அனுமதிக்காத நிகழ்வு மக்களுக்கு மரத்தின் மீது இருந்த அக்கறையினை  உணர்த்துகிறது.

அம்மாவின் பிறந்த தினத்தையொட்டி, மாநிலத்தில் பசுமைப் போர்வையினை அதிகரித்தல், சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படும் விளைவுகளைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டு மாபெரும் மரம் நடவுத் திட்டம் அம்மாவால் துவக்கப்பட்டது. தொடர்ந்து அம்மாவின் அரசாலும் 2011-12 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு, 4 கோடியே 69 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2019-20ஆம் ஆண்டில் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காக கொண்டு இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

தமிழகம் சந்திக்க உள்ள சவால்களை முழுவதுமாக உணர்ந்து தான்  அம்மாவின் அரசு மாநில வனக் கொள்கை, 2018-ஐ வடிவமைத்துள்ளது. இந்தக் கொள்கையில் மாநிலத்தின் நீண்ட நெடும் கடற்கரை, கிழக்கு மற்றும் மேற்கு மலைத் தொடர்கள், வறண்ட பருவநிலை மற்றும் நீர் பற்றாக்குறையை போக்க வேண்டிய பாங்கு, வனப்பகுதிகளுக்கு வெளியேயும் மரங்களை வளர்த்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சுற்றுச் சூழல் மாசினை கட்டுப்படுத்த தமிழ்நாடு சூழல் சுற்றுலாக் கொள்கை, 2017 மற்றும் தமிழ்நாடு சுற்றுசூழல் கொள்கை, 2017 அறிவிக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் அம்மாவின் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன.

காவேரி ஆற்றின் பல்லுயிர் காத்தல், காவேரி மற்றும் அதன் துணை நதிகளில் மாசுகளை அகற்றுதல், காவேரி நகர்ப்புற கழிவு நீரை சுத்திகரிக்க தேவையான சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுதல்,  ஆற்றுப்படுகையில் மரங்களை நட்டு காடுகளை வளர்த்தல், ஆற்று முகப்பு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள  நடந்தாய் வாழி காவேரி  என்ற திட்டத்தினை செயல்படுத்த பாரதப் பிரதமரிடம் நான் கோரிக்கை வைத்ததன் தொடர்ச்சியாக நடந்தாய் வாழி காவேரி திட்டத்தினை பாராட்டி, இதேபோல் நாட்டிலுள்ள ஜீவநதிகளில் செயல்படுத்த ஜனாதிபதி நாடாளுமன்ற கூட்டத்தில் தனது உரையில் இத்திட்டத்தினை குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று, தமிழகத்திலுள்ள பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி ஆறுகளும் மாசுபடுவதைக் தடுக்க அம்மாவின் அரசு நடவடிக்கை எடுக்கும். இதேபோன்று, வைகை மற்றும் நொய்யல் ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.24.58 கோடி மதிப்பீட்டில் 2017-18 முதல் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு 2018-19ஆம் ஆண்டு வரை ரூ.14.06 கோடி செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பாலாறு ஆற்றிற்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் 2019-20ம் ஆண்டு முதல் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அம்மாவின் அரசு பல்வேறு புதிய நீர் மேலாண்மை திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும் அம்மாவின் அரசு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை என்னும் திட்டத்தினை முன்னெடுத்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் திட்டம் தொடர பிரதமர் இந்தியா முழுவதும் செயல்படுத்த அறிவிப்பு செய்துள்ளார்.

உதாரணமாக, அம்மாவின் மழை நீர் சேகரிப்பு திட்டம் எப்படி மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டதோ அதுபோல, மரங்கள் நட்டு நதியைப் பாதுகாக்கும் திட்டத்தையும் மக்கள் இயக்கமாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம், திருமண நிகழ்ச்சி, திருமண ஆண்டு விழா நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் போது மரக்கன்றுகளை வழங்கினால் இந்தத் திட்டம் இன்னும் விரிவடையும். மரக்கன்றுகளை முறையாக நட்டு வளர்த்தால் காடு செழிக்கும். நாடு செழிக்கும். தமிழக மக்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் பெருவாரியாக மரம் வளர்ப்புப் பணிகளில் தொடர்ந்து பங்கேற்று தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்க அம்மாவின் அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். .

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து