தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு நூறு சதவீதம் வரி விலக்கு: முதல்வர் வெளியிட்ட புதிய வாகன கொள்கையில் தகவல்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019      தமிழகம்
new vehicle policy issued by CM 2019 09 16

தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான புதிய கொள்கையை முதல்வர் எடப்பாடி  பழனிசாமி வெளியிட்டார். தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் தயாரிப்போருக்கு மின்சார வரி, முத்திரை தாள் வரி சரக்கு மற்றும் சேவை வரி போன்றவற்றில் இருந்து நூறு சதவீத வரி விலக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

மின்சார வாகன கொள்கை

தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019-ஐ சென்னை தலைமைசெயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதனை தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர், சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாத்து, காற்று மாசுபடுவதை குறைக்கின்ற வகையில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசினால் "தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019" தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019-ன்படி, அனைத்து மின்சார இருசக்கர வாகனங்கள், சீருந்துகள், மூன்று சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள் ஆகியவற்றிற்கு 100 சதவித மோட்டார் வாகன வரி விலக்கு வழங்கப்படும். இந்த வரி விலக்கு, 2022-ஆம் ஆண்டு இறுதி வரை வழங்கப்படும்.

சிறப்பு சலுகைகள்

மின்சார வாகனங்கள், அதன் உதிரி பாகங்கள் மற்றும் மின்கலன் அதற்கான மின்ஏற்று உபகரணங்களை உற்பத்தி செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். ரூபாய் 50 கோடிக்கு மேல் முதலீடு செய்தும், குறைந்தபட்சம் 50 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் பின்வரும் சலுகைகள் பெற தகுதிபெறும்:-

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான மாநில சரக்கு மற்றும் சேவை வரி 100 சதவிகிதம் திரும்ப வழங்கப்படும். இந்த சலுகை 2030-ஆம் ஆண்டு வரை வழங்கப்படும். மின்சார வாகனங்கள் உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 15 சதவிதம் வரையும், மின்கலன் உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 20 சதவிதம் வரையும் மூலதன மானியம் வழங்கப்படும். இந்த சலுகை, 2025-ஆம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும். அரசு தொழிற் பூங்காக்களில், மின்சார வாகனங்கள், மின்ஏற்று உபகரணங்கள் மற்றும் மின்கலன்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்க முன்வரும் நிறுவனங்களுக்கு, நிலத்தின் விலையில் 20 சதவிகிதம் வரை மானியமாக வழங்கப்படும். தென் மாவட்டங்களில் செய்யப்படும் இவ்வகை முதலீடுகளுக்கு, நிலத்தின் மதிப்பில் 50 சதவிதம் மானியமாக வழங்கப்படும். இந்த சலுகை 2022-ஆம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும்.

முத்திரைத்தாள் கட்டண விலக்கு

மின்சார வாகனங்கள் மற்றும் மின்ஏற்று உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும் போது 100 சதவிகித முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்படும். இந்த சலுகை, 2022-ஆம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும். மின்சார வாகனங்கள் மற்றும் மின்ஏற்று உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு 100 சதவிகித மின்சார வரி விலக்கு அளிக்கப்படும். இந்நிறுவனங்கள் மூலம் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்குவதை உறுதி செய்திடும் பொருட்டு, மின்சார வாகனங்கள் மற்றும் மின்ஏற்று உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் 2025-ஆம் ஆண்டு வரை உருவாக்கும் ஒவ்வொரு புதிய வேலை வாய்ப்புக்கும், நிறுவனங்களின் பங்களிப்பாக செலுத்திய தொழிலாளர் சேமநல நிதிக்கு ஈடான தொகை மானியமாக வழங்கப்படும்.

கூடுதலாக மூலதன மானியம்

மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் மற்றும் மின்ஏற்று உபகரணங்கள் உற்பத்தியில் ஈடுபடும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, தற்போதுள்ள மூலதன மானிய திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதி வரம்பை விட 20 சதவிகிதம் கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும். வாகன உற்பத்தி மையங்களிலும், மின்சார வாகன உற்பத்தியில் முதலீடுகளை ஈர்க்கும் திறன் கொண்ட பகுதிகளிலும், அரசு சார்பில், பிரத்யேகமாக மின்சார வாகன உற்பத்தி தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும். நகரங்கள் மற்றும் பிற இடங்களில் மின்சார வாகனங்களுக்கான மின்ஏற்று வசதிகளை உருவாக்க தேவையான கொள்கை ஆதரவு வழங்கப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின்ஏற்று வசதிகளை, சொந்தமாகவோ அல்லது தகுந்த தனியார் பங்களிப்பு மூலமாகவோ ஏற்படுத்தும். உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் போன்ற அனைத்து வணிக கட்டிடங்களிலும், மின்ஏற்று வசதியை ஏற்படுத்துவது உறுதி செய்யப்படும்.

அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கு தேவையான நிதி உதவிகள் வழங்கப்படும். மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கு திறந்த நிலை அனுமதி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். நகரங்களில் உள்ள அனைத்து புதிய கட்டுமானங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில், திட்டமிடல் நிலையிலேயே மின்சார வாகனங்களுக்கான மின்னேற்று வசதிகளை ஏற்படுத்தும் வகையில், கட்டிடம் மற்றும் கட்டுமானச் சட்டங்களில் தேவையான மாறுதல்கள் செய்யப்படும். தமிழ்நாடு அரசு, மின்சார வாகன உற்பத்தித் துறையில் புதிதாகத் துவங்கும் புத்தொழில்களுக்கு தனிக் கவனத்துடன் ஊக்கமளிக்கும். புத்தொழில் கருவூக்கி மையங்கள் மூலம், அலுவலக இடம், பொது வசதிகள் மற்றும் வழிகாட்டுதல் ஆதரவு போன்ற அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய கொள்கை வெளியீட்டு நிகழ்ச்சியில், அரசு தலைமைச் செயலாளர் சண்முகம், எரிசக்தி துறை அரசு முதன்மைச் செயலாளர் முகமது நசிமுதின்,தொழில் துறை அரசு முதன்மைச் செயலாளர் முருகானந்தம், போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம், கபூர்தொழில் துறை சிறப்புச் செயலாளர் அருண் ராய், போக்குவரத்து ஆணையர் .சமயமூர்த்தி, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் கார்த்திகேயன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து