முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைர வியாபாரி நீரவ் மோடியின் காவல் அக்.17வரை நீட்டிப்பு

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

லண்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த விவகாரத்தில் வைர வியாபாரி நீரவ் மோடியின் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் சுமார் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். இது, இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. நீரவ் மோடி மீதான மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக சுற்றி திரிவது தெரிய வந்தது. இதையடுத்து, இந்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த மார்ச் 19-ம் தேதி அவரை லண்டன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமின் கோரி அவர் பலமுறை தாக்கல் செய்த மனுக்களை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வெஸ்ட் மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, நீரவ் மோடியின் காவலை வரும் அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு அடுத்த ஆண்டு மே மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான பணிகள் நடப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீரவ் மோடியின் வைர நகைக் கடைகள், இந்தியாவில் மட்டுமல்லாமல் லண்டன், நியூயார்க், சிங்கப்பூர் உட்பட உலகின் பல நாடுகளில் உள்ளன. 2010-ம் ஆண்டு, குளோபல் டைமண்டு ஜுவல்லரி ஹவுஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பிறகு, அவரின் வளர்ச்சி பல மடங்கு உயர்ந்தது. இந்நிலையில்தான், வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து