முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் 9-ம் தேதி கைசிக துவாதசி விழா

சனிக்கிழமை, 2 நவம்பர் 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9-ம் தேதி கைசிக துவாதசி விழா நடக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்கவாசலில் 9-ம் தேதி கைசிக துவாதசி விழா நடக்கிறது. அன்று அதிகாலை சுப்ரபாத சேவை, தோமால சேவை ஆகியவை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. அதைத்தொடர்ந்து சூரிய உதயத்துக்குப் முன்பாக அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிவரை உற்சவர் உக்ர சீனிவாசமூர்த்தி தனது உபயநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். பக்தர்கள் உக்ர சீனிவாசமூர்த்தியை, வெங்கடதுரைவார் என்றும் அழைப்பர். வீதிஉலா முடிந்ததும் உற்சவர்களை கோவிலுக்குள் கொண்டு செல்கிறார்கள். கோவில் உள்ளே தங்க வாசலில் காலை 7 மணியளவில் கைசிக துவாதசி ஆஸ்தானம் நடக்கிறது. மகாவிஷ்ணு ஆசாட மாதம் சுக்கல ஏகாதசி அன்று சயன கோலத்துக்குச் செல்வார். அப்போது சயன கோலத்துக்குச் சென்றவர், தற்போது கைசிக துவாதசி அன்று சயன கோலத்தில் இருந்து எழுவதாகப் புராணங்களில் கூறப்படுகிறது. மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருந்து எழுவதை வரவேற்கும் விதமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கைசிக துவாதசி விழா கொண்டாடப்படுகிறது.

கைசிக துவாதசி பற்றி ஒரு புராணக்கதைக் கூறப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நம்பிபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் மகேந்திரகிரிமலை உள்ளது. மலையடிவாரத்தில் தாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்த நம்பாடுவான் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர், தீவிர விஷ்ணு பக்தர். ஏகாதசி விரதம் மேற்கொண்டு நம்பிபெருமாளை வழிபடுவது வழக்கம். ஒருநாள் ஏகாதசி விரதம் மேற்கொண்டு நம்பிபெருமாளை வழிபட காட்டு வழியாக வந்தார். அவரை, ஒரு பிரம்மராட்சன் தடுத்து நிறுத்தி, நீ எனக்கு உணவாக வேண்டும் எனக் கூறினான். அதற்கு நம்பாடுவான், இன்று நான் விரதம் மேற்கொள்கிறேன். நம்பிபெருமாளை தரிசித்து விட்டு திரும்பி வருகிறேன், அதன் பிறகு என்னை உணவாக்கி கொள், எனக்கூறி விட்டு நம்பிபெருமாளை தரிசிக்கச் சென்று விட்டார். கோவிலில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. தாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்த நம்பாடுவான் கோவில் உள்ளே செல்ல முடியாததால் வெளியே நின்று தன்னிடம் இருந்த யாழ் இசைக்கருவியால் கைசிக பண் இசைத்து நம்பிபெருமாளை வழிபட்டார்.  தான் ஆட்கொள்ளப் போகும் பக்தனுக்கு திருமுகத்தைக் காண்பிக்க, நேர் எதிரே நின்றிருந்த கொடிமரத்தை விலகி நில், எனக்கூறி நம்பாடுவானுக்கு அருட்பேரொளி வீசி தரிசனம் தந்தார் நம்பிபெருமாள். பிரம்ம ராட்சசனுக்கு தான் உணவாகப் போவதாக வாக்குக் கொடுத்திருந்த நம்பாடுவான் கோவிலில் இருந்து திரும்பி காட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். வழியில் பின்தொடர்ந்து முதியவர் ரூபத்தில் வந்த நம்பிபெருமாள், நம்பாடுவானை தடுத்து நிறுத்தி, போகும் வழியில் ஒரு ராட்சசன் உள்ளான், அவன் அந்த வழியாக வருவோர் போவோரை பிடித்துச் சாப்பிட்டு விடுவான். ஆதலால் நீ அந்த வழியாக போக வேண்டாம் எனக் கூறினார். எனினும் அதை மீறி, காட்டுக்குப்போய் பிரம்ம ராட்சசனிடம் என்னை சாப்பிட்டுக் கொள் என்றார் நம்பாடுவான். ஆனால் ராட்சசனோ எனக்கு பசியே இல்லை, உன் உடல் வேண்டாம் எனக் கூறி மறுத்து விட்டான். ஆனால் கைசிக பண் இசைத்த பலனை மட்டும் எனக்கு தாருங்கள் என்றான். அங்கு, திடீரென ஒரு பேரொளி வீசியது. முதியவர் ரூபத்தில் பின் தொடர்ந்து வந்த நம்பிபெருமாள் இருவருக்கும் காட்சி கொடுத்து மறைந்தார். இன்றும் வைணவ தலங்களில் கைசிக துவாதசி விழா கொண்டாடப்படுகிறது. அன்று கைசிக பாராயணம் இசைக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து