ராமேஸ்வரத்தில் குருநானக் நினைவை போற்றும் வகையில் மையம் அமைக்க இடம் வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019      தமிழகம்
cm edapadi palanisamy 2019 10 15

சென்னை : ராமேஸ்வரத்தில் குருநானக் நினைவை போற்றும் வகையில் மையம் அமைக்க இடம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
மகான் குருநானக்கின் 550 - வது ஜெயந்தி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரும், 10 சீக்கிய மத குருக்களில், முதன்மையானவருமான குருநானக் தேவ் ஜி-யின் 550 - வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகின்றேன். மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். குருநானக் அவர்களின் பிறந்தநாள், ஒவ்வொரு வருடமும் நவம்பர் 12ஆம் நாள் “குருநானக் ஜெயந்தி” மற்றும் குருநானக் தேவ் பிரகாஷ் திவஸ்’’ என விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கிய சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் ஏறக்குறைய 270 லட்சம் சீக்கியர்கள் வாழ்கின்றனர்.  இது உலக மக்கள் தொகையில் 0.39 சதவீதம் ஆகும்.  இந்தியாவில் 190 லட்சம் சீக்கியர்கள் வாழ்கின்றனர்.  இது இந்திய மக்கள் தொகையில் 2 சதவீதம் ஆகும்.  சீக்கியர்கள் கொள்கை ரீதியாக, நம்பகமான, விசுவாசமான, தேசபக்தி மிகுந்த கடின உழைப்பாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சீக்கியர்களின் பங்கு மிக முக்கியமானது.சீக்கிய மதம் நாடு, மொழி மற்றும் இனப்பாகுபாடுகளைத் தாண்டி, மனித இனத்திற்கு சிறந்த நெறிமுறைகளை வழங்கியுள்ளது.  மதசார்பற்ற வாழ்க்கையை ஆன்மீக வாழ்க்கையோடு இணைந்து வாழ வேண்டும் எனவும், இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்து,  இறைவனை அடைய முயல்வதே மனித வாழ்வின் குறிக்கோள் எனவும் சீக்கிய மதம் போதிக்கிறது. 

மனித வாழ்க்கையில் எந்த ஒரு மனிதனையும் பொருளாதார ஏற்றத்தாழ்வு பார்க்காமல், சமமாகக் கருத வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.  இதனைப் போதிக்கும் வகையில் அனைத்து குருத்வாராக்களிலும் நடத்தப்படும் “லங்கார்’, அனைவருக்கும் ஒரே வகையான உணவு வழங்கும் நிகழ்ச்சியானது சிறப்புமிக்கது. குருநானக் தேவ்ஜி 1499 -ம் ஆண்டு தன்னுடைய 30 - வது வயதில் ஞானம் பெற்று தெய்வீக நிலையை அடைந்தார்.  தன்னுடைய போதனைகளால் மக்களை நல்வழிப்படுத்தி, அவர்களிடையே நிலவி வந்த மூடப் பழக்கவழக்கங்களைக் களைந்தார். பெண்கள் சமுதாயத்தின் கண்கள் எனவும், அவர்களைப் போற்றி மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.  சமத்துவம், சகோதரத்துவம், நற்குணம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவம் வாய்ந்த ஆன்மீக, சமூக, அரசியல் தளத்தை உருவாக்கி நேர்மையாக வாழவேண்டும் என குருநானக் போதித்துள்ளார்.   குருநானக்கின் வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி நடப்போம் எனக் கூறி, குருநானக் ஜெயந்தி நாளான இன்று அவரை வணங்கி, நான் பங்கேற்பதற்கு வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மற்றும் தமிழகத்தில் வாழும் சீக்கிய சகோதரர்கள், பல்வேறு கோரிக்கைகளை என்னிடம் வைத்துள்ளார்கள். அவற்றுள் ராமேஸ்வரத்தில், மகான் குருநானக் அவர்கள் ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்ட நினைவைப் போற்றும் வகையில் ‘மையம்’ ஒன்று அமைப்பதற்கு இடம் தேவை என்று கேட்டுள்ளீர்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசால் மையம் ஒன்று அமைக்க இடம் வழங்கப்படும். மற்ற கோரிக்கைகள் அனைத்தும் அரசினுடைய பரிசீலினையில் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வாழ்கின்ற அனைத்து சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கும் தமிழக மக்கள் என்றைக்கும் துணை நிற்பார்கள், தமிழ்நாடு அரசும் அவர்களுக்குத் துணை நிற்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து