விண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019      ஆன்மிகம்
tiruvannamalai mahadeepam 2019 12 10

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் நேற்று கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அக்னி ஸ்தலமாக  விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபதிருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தான் என்ற அகந்தையை அழிக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காணமுடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம்.  அந்த நாளே திருவண்ணாமலையில் கார்த்திகை தீபதிருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பகலில் சந்திரசேகரர், விநாயகரும், இரவில் பஞ்சமூர்த்திகளும் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். விழாவின் 7-ம் நாளன்று தேரோட்டம் நடைபெற்றது. இவ்விழாவின் உச்சக் கட்ட   திருவிழாவான கார்த்திகை தீபதிருவிழா நேற்று நடைபெற்றது.

அதிகாலை 2 மணியளவில் அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.  அதைத் தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்ககவசமும், உண்ணாமுலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் அண்ணாமலையார் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில்  சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத,  அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இந்நிலையில், தீபவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வாக  கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணைப் பிளந்த நிலையில், மகாதீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையார்  கோயிலில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளினர். அப்போது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சில நொடிகள் காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவத்தில் காட்சியளித்தார். அப்போது, கோயில் தங்க  கொடிமரம் அருகேயுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

இதற்காக 5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட செம்பால் ஆன மகாதீப கொப்பரை, ஆயிரம் மீட்டர் திரி, 3500 கிலோ நெய் ஆகியவை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று ஏற்றப்பட்ட மகாதீபமானது தொடர்ந்து 11 நாட்கள் மலையில்  பிரகாசிக்கும்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 2615 சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டது. திருவண்ணாமலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தீபத்திருவிழாவையொட்டி வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் தலைமையில் 6 டி.ஐ.ஜி.க்கள், 15 எஸ்.பி.க்கள் உள்பட 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் தீபம் ஏற்றும் மலையில் மீட்பு பணி மற்றும்  பாதுகாப்புக்காக கமாண்டோ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து