போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம் - முகாமை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020      தமிழகம்
cm edapadi start polio drops camp 2020 01 19

சென்னை : பூமியில் இருந்து போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம் என உறுதியேற்போம் என்று போலியோ முகாமை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை முகாம் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி, போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது,

முதலில் ஆண்டுக்கு இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் போலியோ நோயால் பாதிக்கப்படுகின்ற குழந்தைகள் முழுவதுமாக இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தினாலும்,  போலியோ நோய் வருவதற்கு முன்பு தடுக்க வேண்டும் என்ற காரணத்தினாலும், ஆண்டுக்கு ஒரு முறை போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கி கொண்டு இருக்கின்றோம்.  குறித்த காலத்திலே வழங்கப்படுகின்ற காரணத்தினாலே, தமிழகத்திலே 16 ஆண்டுகளாக போலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறது. சுமார் 2 லட்சம் பணியாளர்கள் இந்தப் பணியிலே ஈடுபடுத்தப்பட்டு  இருக்கிறார்கள். சுமார் 43,051 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதோடு சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல, சுமார் 1,000 நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத  இடங்களுக்கு சுகாதாரத் துறையை சேர்ந்த அதிகாரிகள் நேரில் சென்று அங்கிருக்கின்ற குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கிடவும், இந்த நோயை முற்றிலும் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் அரசு இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற பகுதிகளிலும் இந்த சொட்டு மருந்து வழங்குவதற்காக 1,652 பயணவழி மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே, இன்றைக்கு அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு  மருந்து வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலே அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.  போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு போலியோ நோய் இல்லாத மாநிலமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறது. பூமியில் இருந்து இந்த போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம் என உறுதியேற்போம். போலியோ நோய் குழந்தைகளுக்கு ஏற்பட்டு விட்டால் வாழ்நாள் முழுவதும் அந்தக் குழந்தை கஷ்டப்பட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விடும். அரசாங்கம் செய்துள்ள இந்த  ஒரு நல்ல ஏற்பாட்டை பெற்றோர்கள் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்க வேண்டும். 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க. சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து