சிறை நிர்வாகம் ஆவணங்களை வழங்க மறுப்பதாக புகார் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 2 பேர் டெல்லி கோர்ட்டில் மனு

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2020      இந்தியா
nirbhaya-case 2020 01 24

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரில் 2 பேர் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் முகேஷ் குமார் சிங்(32), பவன் குப்தா(25), வினய் சர்மா(26), அக்ஷய் குமார் சிங்(31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் இம்மாதம் 22-ம் தேதி அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் செய்து வந்தது. இந்த நிலையில், குற்றவாளிகளின் ஒருவனான முகேஷ் சிங், தூக்கு தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால் ஜனாதிபதி அந்த கருணை மனுவை நிராகரித்தார்.

கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி, நோட்டீஸ் அனுப்பிய நாளில் இருந்து 14 நாட்களுக்கு பின்னர்தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற விதி இருப்பதால், முகேஷ் சிங்கிற்கு கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கான நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. 14 நாட்களை கணக்கில் வைத்து பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் என்று திகார் சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தூக்கு மேடைக்கு அருகில் இருக்கும் 4-ம் எண் சிறைக்கு நால்வரும் மாற்றப்பட்டு அங்கே தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூக்கிடும் தேதி நெருங்குவதால், தூக்கு கைதிகளின் கடைசி ஆசை என்ன? என்று கேட்டு அவர்களுக்கு திகார் சிறை நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 பேரில் 2 பேர் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். விஜய் பவன், சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். கருணை மனு தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை திகார் சிறை நிர்வாகம் வழங்க மறுப்பதாக மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து