மத்திய கிழக்கு நாடுகளுக்கான அதிபர் டிரம்ப்பின் திட்டம் அச்சுறுத்தும் கனவு - ஈரான் அமைச்சர் விமர்சனம்

புதன்கிழமை, 29 ஜனவரி 2020      உலகம்
Iranian minister criticizes 2020 01 29

டெக்ரான் : மத்திய கிழக்கு நாடுகளுக்கான அதிபர் டிரம்ப்பின் திட்டம் அச்சுறுத்தும் கனவு என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், செவ்வாய்க்கிழமை கிழக்கு ஜெருசலேமில் புதிய தலைநகருடன் கூடிய பாலஸ்தீனம் அரசு உருவாகும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் டிரம்ப்பின் இத்திட்டத்தை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரிப் கூறும் போது,

அமைதிக்கான பார்வை என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் ரியல் எஸ்டேட்டில் திவாலான நிலையில் இருப்பவரின் கனவுத் திட்டமாகும். இது அச்சுறுத்தும் கனவு. இதன் மூலம் இஸ்லாமிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார். எங்களால் நிராகரிக்கப்பட்ட எந்த அமைதி ஒப்பந்தத்தையும் நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று பாலஸ்தீனம் முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த போதே பாலஸ்தீனம் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்ற போது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர். பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து