சூப்பர் ஓவர் எங்களுக்கு சரியாகவே அமைந்தது இல்லை: வில்லியம்சன் விரக்தி

புதன்கிழமை, 29 ஜனவரி 2020      விளையாட்டு
Williamson frustrated 2020 01 29

ஹாமில்டன் : 50 ஓவர் உலக கோப்பை சூப்பர் ஓவரில் வெற்றி பெற முடியாத நிலையில், தற்போது இந்தியாவுக்கு எதிராகவும் தோல்வியடைந்ததால் கேன் வில்லியம்சன் விரக்தி அடைந்துள்ளார்.

நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. ஆட்டம் ‘டை’யில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா கடைசி இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு தூக்க நியூசிலாந்து தோல்வியை தழுவியது.இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து எதிராக நியூசிலாந்து விளையாடிய ஆட்டம் சமனில் முடிந்தது. அப்போது சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதுவும் சமனில் முடிந்தது. இதனால் பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.ஓவர் கைக்கொடுக்காததால் உலக கோப்பையை இழந்த நியூசிலாந்து, தற்போது இந்தியாவுக்கு எதிராக முதன்முறையாக சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்துள்ளது.

இந்நிலையில் சூப்பர் ஓவர்கள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை என்று கேன் வில்லியம்சன் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தது குறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில், சூப்பர் ஓவர்கள் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. இதனால் வழக்கமான நேரத்தில் போட்டியை முடிக்க முயற்சி செய்வது அவசியம். அனைத்துத் துறையிலும் சிறப்பாக செயல்பட்டோம்.இந்திய அணி அபாரமான தொடக்கத்தை பெற்றபின், சிறப்பாக பந்து வீசி அவர்களை கட்டுப்படுத்தினோம். இவ்வளவு முயற்சி செய்து விளிம்பில் வந்து தோல்வியை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இந்த போட்டியில் சிறு இடைவெளியில்தான் தோல்வியை சந்தித்தோம். கடைசி மூன்று பந்துகளில், இந்தியாவின் அனுபவத்தை நாங்கள் பார்த்தோம். அவர்களிடம் இருந்து கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும். ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடி, வீரர்களுடன் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்தது  அருமை என்று தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து