கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: உயர்மட்ட குழுவை அமைத்தது மத்திய அரசு

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2020      இந்தியா
central govt 2020 02 13

புது டெல்லி : மத்திய சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் முதன் முதலில் பரவிய கொரோனா வைரசுக்கு, தற்போது ‘கோவிட்-19’ என்று  பொதுவான பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது. சீனா, ஹாங்காங், ஜப்பான் உட்பட 28 நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வரும் இந்த நோயை  குணமாக்க, இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், சீனாவில் இதன் தாக்குதலால் பலியாகும் மக்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து  வருகிறது.

இதற்கிடையே, இந்தியாவைப் பொறுத்த வரையில் தென் மாநிலமான கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.  தொடர்ந்து, கேரளா உள்பட அனைத்து மாநிலங்களும் வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்ட  டைமண்ட் பிரின்சஸ் என்கிற சொகுசு கப்பலில் சிக்கியுள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம்  தெரிவித்தது. இந்த நிலையில், பாங்காக்கில் இருந்து விமானம் மூலம் டெல்லி திரும்பிய கொல்கத்தாவைச் சேர்ந்த 2 பேருக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கொரோனா குறித்து கண்காணிக்க மூத்த அமைச்சர்கள் தலைமையில் உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. பிரதமர்  நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆய்வு  உள்ளிட்ட பணிகளை உயர்மட்ட குழு மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து