Idhayam Matrimony

ராணுவத்தில் பாலின பாகுபாடு பார்க்கக் கூடாது! பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைக்க 3 மாத கெடு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ராணுவத்தில் ஆண்களும், பெண்களும் சமமாக பணியாற்றும் போது அவர்களுக்குள் பாகுபாடு பார்க்கக் கூடாது என்றும் ராணுவத்தில் உள்ள அனைத்துப் பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர ஆணையத்தை அடுத்த 3 மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பெண் அதிகாரிகளுக்கு உயர்ந்த பதவிகள் வழங்குவதில் எந்தவிதமான தடையும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

விமானப் படை, கடற்படை ஆகியவற்றில் பெண்கள் குறுகிய காலம் மட்டுமே பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து கடற்படை பெண் அதிகாரிகள் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த 2010-ம் ஆண்டு விசாரித்த ஐகோர்ட், கடற்படையில் பெண்களை முழுமையான சேவையில் பணியமர்த்துமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையின் போது, ராணுவத்தில் கமாண்டர் போன்ற பதவியிடங்களுக்கு பெண்களை ஏன் தேர்வு செய்யக் கூடாது என நீதிபதிகள் கேள்வியெழுப்பியிருந்தனர். அதற்கு மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் அளித்த அறிக்கையில்,

ஆண்களை ஒப்பிடும்போது, பெண்களின் உடல் வலிமை மிகவும் குறைவு. அதே போல், மகப்பேறு காலங்களில் அவர்கள் நீண்ட விடுமுறை எடுக்க வேண்டியிருக்கும். குழந்தைகளை பராமரிப்பது, கணவர்களின் தேவைகளை கவனிப்பது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் அவர்களுக்கு உள்ளன. இதனால், ராணுவத்தில் கமாண்டர்களாகப் பணிபுரிவது பெண்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். இது ஒருபுறம் இருக்க, ராணுவத்தில் பணிபுரியும் ஆண்கள், உடல் வலிமையில் குன்றிய பெண் அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்று நடப்பதும் கேள்விக்குறிதான். எனவே, இது போன்ற காரணங்களால் ராணுவ கமாண்டர்களாக பெண்களை பணியமர்த்துவது அரசுக்கு சவாலான விஷயம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா அமர்வு இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெண்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படும் பிரச்சினைகள், காரணிகள் எல்லாம் அவர்கள் ராணுவத்தில் உயர்ந்த பதவிகளை பெறுவதற்கு தடையாக இருக்கும் என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. அரசியலமைப்பு சட்டத்தில் அதற்கு எந்தவிதமான இடமும் இல்லை. ராணுவத்தில் சமத்துவத்துடன் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகி விட்டன. மத்திய அரசின் மனநிலையில் மாற்றம் வர வேண்டும். ராணுவத்தில் பெண்களுக்கும் உயர்ந்த அதிகாரிகள் அந்தஸ்து பதவிகள் வழங்க வேண்டும். பல்வேறு பெண் அதிகாரிகள் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்கள். சேனா விருதுகளை பெற்றுள்ளார்கள். ஐ.நா. அமைதிப் படையில் பணிபுரிந்துள்ளார்கள். ஆதலால், பெண்களின் உளவியல் காரணிகளை காரணமாக்கி பதவி உயர்வை மறுக்க முடியாது. கடந்த காலத்தில் ராணுவத்தில் பெண் அதிகாரிகள் பல்வேறு உயர்ந்த பதவிகளை வகித்துள்ளார்கள். பெண்களை நடத்தும் பாங்கில் அரசின் மனநிலையில் மாற்றம் தேவை. ராணுவத்தில் ஆண்களும், பெண்களும் சமமாக பணியாற்றும் போது அவர்களுக்குள் பாகுபாடு பார்க்கக் கூடாது. 2010-ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட், பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் உருவாக்க வேண்டும் என்று அளித்த தீர்ப்பை அமல்படுத்தாமல் மேல்முறையீடு செய்து 10 ஆண்டுகளை மத்திய அரசு வீணடித்துள்ளது வேதனைக்குரியது. டெல்லி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப மத்திய அரசு நடக்க வேண்டும், அந்த உத்தரவுக்கு எந்தவிதமான தடையும் இல்லை. ராணுவத்தில் ஆண் அதிகாரிகளுக்கு நிகராக, பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தரமான ஆணையத்தை மத்திய அரசு அடுத்த 3 மாதங்களுக்குள் அமைக்க வேண்டும். ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு எந்த விதமான உயர்ந்த பதவிகளை வழங்குவதிலும் தடை ஏதும் இல்லை. இவ்வாறு அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து