அமைச்சர் வேலுமணி தொடர்ந்த அவதூறு வழக்கு: மார்ச் 4-ல் ஸ்டாலின் ஆஜராக சென்னை கோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020      தமிழகம்
stalin-velumani 2020 02 24

சென்னை : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த அவதூறு வழக்கில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மார்ச் 4-ம் தேதி ஆஜராக முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் துறையில் முறைகேடுகள் நடப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 2019 செப்டம்பர் 4-ம் அறிக்கை வெளியிட்டார். அது அக்கட்சி சார்ந்த பத்திரிகையில் வெளியானது. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டவை உண்மைக்குப் புறம்பாக இருப்பதாகவும், தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் கூறி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் தமிழக அரசு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்தது. அந்த வழக்கில் நேற்று ஸ்டாலின் நேரில் ஆஜராக ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த அவதூறு வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டாலின் நேரில் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்டாலின் இன்று(நேற்று) ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். மேலும் அமைச்சர் வேலுமணி தரப்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருப்பதால் அவதூறு வழக்கைத் தள்ளிவைக்கும்படியும் கோரிக்கையுடன் மனுத் தாக்கல் செய்தார். ஸ்டாலின் வழக்கில் நேரில் ஆஜராக நேற்று ஒரு நாள் விலக்களித்த நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் ஸ்டாலின் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து