தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,024 உயர்வு - பவுன் ரூ. 33 ஆயிரத்தை தாண்டியது

புதன்கிழமை, 4 மார்ச் 2020      வர்த்தகம்
gold rate 2020 03 04

சென்னை : சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.33 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும். இதற்கிடையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்தது. ஒரு பவுன் விலை முதல் முறையாக ரூ. 30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள். அதன்பின்னர் தங்கத்தின் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று முன்தின நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ஆயிரத்து 200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் நேற்று காலை தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 24 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 33 ஆயிரத்து 224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் தங்கம் கிராமிற்கு 128 ரூபாய் உயர்ந்து 4153 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் 60 காசுகள் உயர்ந்து 50 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரன் ஆயிரத்து 24 ரூபாய் உயர்ந்துள்ளதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து