புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை: சவரன் ரூ. 34,000-ஐ நெருங்குகிறது

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2020      வர்த்தகம்
gold price 2020 03 05

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 872 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ. 872 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 33,848-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.109 உயர்ந்து ரூ.4,231-க்கு விற்பனையானது. இதே போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.50.70-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, ஆபரண தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. முதன் முதலாக கடந்த ஜனவரி மாதத்தில்தான் ஆபரண தங்கம் சென்னையில் சவரன் ரூ. 31,000- ஐ தாண்டியது.  ஜனவரி மாத துவக்கத்தில் தொடர்ந்து 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்தது. பின்னர், அடுத்தடுத்து சரிவை சந்தித்ததால், அந்த மாத இறுதியில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஆனால், கடந்த மாதம் தங்கம் விலை நிலையாகவே ஏறுமுகத்துடன் காணப்பட்டது. கடந்த மாதம் 18-ம் தேதியில் தொடங்கி 6 நாட்களிலேயே சவரனுக்கு ரூ. 2,112 அதிகரித்தது. அதிகபட்ச உச்சமாக கடந்த மாதம் 24-ம் தேதி ஒரு சவரன் தங்கம் சவரனுக்கு ரூ. 752 அதிகரித்து ரூ. 33,328-க்கு விற்கப்பட்டது. பின்னர், கடந்த 25-ம் தேதி சவரனுக்கு ரூ. 592 சரிந்தது. இதுபோல் கடந்த மாதம் 29-ம் தேதி அதிகபட்சமாக சவரனுக்கு ரூ. 624 குறைந்தது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்தே, சர்வதேச சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டு வருகிறது. அதோடு, அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை 0.5 சதவீதம் குறைத்ததால் தங்கம் விலை மேலும் உயர்ந்தது. மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்ததால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 73-க்கு மேல் சரிந்தது. இதனால், இந்தியாவில் தங்கத்தில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 872 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.33,848-க்கு விற்பனையானது. இது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து