முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது - மாவட்ட எல்லைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

சென்னை : தமிழக அரசு அறிவித்தபடி நேற்று மாலை 6 மணியளவில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. மேலும் மாவட்ட எல்லைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

அதிரடி நடவடிக்கைகள்

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முதல் கட்டமாக அனைத்து பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது பிளஸ் 1 தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

144 தடை அமல்

இதனிடையே தமிழகத்தில் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் மாவட்ட எல்லைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. டீக்கடைகள் திறந்திருக்கும் என்று அறிவித்த அரசு, அதே நேரம் டீக்கடைகளில் கூட்டம் கூடக் கூடாது என்றும் அறிவித்தது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் பார்சல் வாங்கி செல்ல தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதே நேரம் பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள் ஓடாது என்றும் அரசு அறிவித்தது.

வந்தது விழிப்புணர்வு

இந்த நிலையில் நேற்று மாலை அரசு அறிவித்தபடி 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. அதையடுத்து அனைத்து மாவட்ட எல்லைகளும் சீல் வைக்கப்பட்டன. கடந்த ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட போது கூட மக்கள் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள். ஆனால் 144 தடை உத்தரவு என்று அரசு அறிவித்ததும் மக்கள் மத்தியில் ஒருவித பரபரப்பும் அச்சமும் தொற்றிக் கொண்டது. அந்த அச்சத்தின் விளைவாக மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவித்தனர். அரிசிக் கடைகளிலும் சரி, காய்கறி கடைகளிலும் சரி கூட்டம் அலைமோதியது. தங்களால் எவ்வளவு வாங்க முடியுமோ அவ்வளவு பொருட்களையும் மக்கள் வாங்கி சென்றனர். 6 மணிக்கு 144 தடை அமல் என்பதை உணர்ந்து அதற்கு முன்பே தங்கள் வீடுகளை நோக்கி மக்கள் பறந்தனர். ஊரடங்கு உத்தரவின்போது கூட மக்கள் மாஸ்க் அணிந்ததை அவ்வளவாக காண முடியவில்லை. ஆனால் நேற்று பஸ்களிலும், சாலைகளிலும் சென்ற மக்கள் மாஸ்க் அணிந்து சென்றதை காண முடிந்தது. கொரோனாவின் தீவிரத்தை மக்கள் புரிந்து கொண்டதையே இது காட்டுகிறது. ஊரடங்கு உத்தரவிற்கும், 144 தடை உத்தரவுக்கும் வித்தியாசம் உள்ளது. ஊரடங்கு உத்தரவின் போது பொதுமக்கள் வெளியே வரக்கூடாது. ஆனால் 144 தடை உத்தரவின் போது 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடக் கூடாது என்பதுதான் விதி. இதை பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும். போலீசாரும் புரிந்து கொண்டு பொதுமக்களிடத்தில் நல்ல முறையில் அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டுமே தவிர அடக்குமுறையை கையாளக் கூடாது என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து