கொரோனா குறித்து நவம்பர் மாதமே சீனாவுக்குத் தெரிந்திருக்கக் கூடும்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2020      உலகம்
US Minister 2020 04 24

கொரோனா வைரஸ் குறித்து சீனாவுக்கு நவம்பர் மாதமே தெரிந்திருக்கக் கூடும் என்று அமெரிக்கா மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனா வெளிப்படையாக இல்லை என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. அந்த வகையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ மீண்டும் சீனாவை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

கொரோனா வைரஸ் குறித்து சீனாவுக்கு நவம்பர் மாதமே தெரிந்திருக்கக் கூடும். உலக சுகாதார அமைப்பு உட்பட அனைத்தும் இந்தத் தொற்றை மெதுவாக அடையாளம் கண்டுள்ளன. இந்த விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை முக்கியமானது. நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் என்ன நடந்தது என தற்போது அறிந்து கொள்வது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக சீனா எந்தத் தகவலையும் மறைக்கவில்லை. எனவே, சீன அரசின் கட்டளைக்குப் பணியும் நாடு போல் அமெரிக்கா அணுகத் தேவையில்லை என்று சீனத் தூதர் லியு சியாமிங் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் ஆய்வகத்தில் இருந்து பரவியதாக அமெரிக்கா, சீனா மீது குற்றம் சாட்டியது. இது தொடர்பாக ஆய்வு செய்ய தங்களை சீனா அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரியது. ஆனால், அமெரிக்காவை அனுமதிக்க சீனா மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து