முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமராஜரைப் போன்று தமிழகத்தை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

புதன்கிழமை, 15 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : காமராஜரைப் போன்று தமிழகத்தை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார். 

காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கர்மவீரர் என்று அன்போடு அழைக்கப்படும்  பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை  அரசு விழாவாக கொண்டாடும் இவ்வேளையில், அவரைப் பற்றி நினைவு கூர்வதை நான் பெருமையாக கருதுகிறேன்.  1903-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ம்  நாள் பிறந்த  பெருந்தலைவர், நாட்டுக்காக உழைப்பதையே தனது லட்சியம் என கொண்டிருந்தார்.

பெருந்தலைவர் நமது தாய்நாட்டின் சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில்  கலந்து கொண்டதால், ஆங்கிலேய அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.  அதன் பின்னர் சுதந்திர போராட்டத்திற்காக  பலமுறை சிறை சென்ற தியாக சீலர். திருமணமும் இல்லறமும் சமுதாயப் பணிக்கு தடையாக இருக்கும் என பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தவர். 

1954-ம் ஆண்டில், அப்போதைய சென்னை மாநில முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெல்லாம் பள்ளிக்கூடங்களை அமைத்து, தமிழ் சமுதாயத்தை படிப்பறிவு மிக்க அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்கினார். பல தொழிற்சாலைகளை நிறுவி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்.  அதே போன்று, நீர்வள மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழ்நாட்டில் பல அணைகளை கட்டிய பெருமைக்குரியவர்.

பெருந்தலைவர் காமராஜருடைய எளிமை, தமிழகத்தை மட்டுமல்ல; இந்தியாவை மட்டுமல்ல;  உலகத்தையே வசீகரித்து இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் உடையில் மட்டுமல்ல, உணவில், பிறருடன் பழகுவதில், மேடை பேச்சு, இப்படி எல்லாவற்றிலும் அவருடைய ஒளி வீசியது என அம்மா பெருந்தலைவரை மனதார பாராட்டி உள்ளார்.  

காமராஜருக்கு அருகில் எப்பொழுதும் ஒரு கைப்பெட்டி இருந்ததாகவும், அதைத் தான் பலமுறை பார்த்திருப்பதாகவும், ஆனால் அப்பெட்டியில் என்ன இருக்கிறது என யூகித்துக் கொள்ள முடியவில்லை எனவும், பெருந்தலைவர் காமராஜரின் மறைவுக்கு பின்னர் அப்பெட்டி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அப்பெட்டியை திறந்து பார்த்த போது, அதில் அவரது அன்னையின் படம் இருந்தது எனவும்,  இது அன்னையின் மீது அவருக்கு இருந்த பாசத்தை காட்டுவதாகவும் எம்.ஜி.ஆர் கர்ம வீரரைப் பற்றி நினைவு கூர்ந்துள்ளார்.  தன்னை பெற்ற தாயின் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பை போலவே, பெருந்தலைவர் காமராஜர் தாய்த்திருநாட்டின் மீதும் மிகுந்த பற்று வைத்திருந்தார்.  

எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்ற பெருந்தலைவர், தனது பதவியை விட தேசப் பணியே முக்கியம் என எப்போதும் நினைப்பவர். அதன் காரணமாகவே தனது முதல்வர் பதவியையும் துறந்து நாட்டுக்காகப் பணியாற்றியவர். அகில இந்திய அளவிலும் தலைவர்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர்.

இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினைப் பெற்றவர். அவருடைய எளிமையால், தன்னலமற்ற தொண்டால்; நாட்டுப் பற்றால், புரிந்த தியாகத்தால் பெருந்தலைவர் காமராஜர் பிறந்து நூற்றாண்டுகள் கடந்த போதிலும், நம்முடைய நினைவிலே என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது என அம்மா பெருந்தலைவரைப் பற்றி கூறியது இத்தருணத்தில் நினைவு  கூரத்தக்கது. 

தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம், கல்வியில் முன்னேற்றம்,  தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம்,  நீர்வளத்தில் முன்னேற்றம்   என  தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது அனைத்து துறைகளிலும் முத்திரையை பதித்த பெருந்தலைவர் காமராஜரை போன்று அம்மாவின் அரசும் தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று, பீடு நடைபோடும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து