ஒருவருக்கு தலா 2 மாஸ்க் வீதம் வழங்கப்படுகிறது: ரேஷன் கடைகள் மூலம் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 27 ஜூலை 2020      தமிழகம்
Govt-1-Edappadi 2020 07 27

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (27.7.2020) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், முதற்கட்டமாக  பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) வசிக்கும் 69.09 லட்சம்  குடும்பங்களுக்கு 4.44 கோடி முகக்கவசங்கள் நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு முகக்கவசங்களை வழங்கி துவக்கி வைத்தார்.   

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான், நோய் தொற்றிலிருந்து குணமடைந்து, இல்லம் திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாகவும், உயிர் இழப்போரின் எண்ணிக்கை  மிகக் குறைவாகவும் உள்ளது. 

மத்திய அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில், அனைத்து பொது இடங்கள் மற்றும் பணியிடங்களிலும், பிற இடங்களுக்கு பயணிக்கும் போதும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்  என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  இதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வர் கொரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். 

தமிழ்நாட்டில் உள்ள 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களின் 6.74 கோடி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு  விலையில்லா தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கும் வகையில், முதற்கட்டமாக  பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) வசிக்கும் 69.09 லட்சம் குடும்பங்களுக்கு 4.44 கோடி விலையில்லா தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் 30 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளின் மூலம் முகக்கவசங்கள் வழங்கும் திட்டம் நேற்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் காமராஜ், டாக்டர் சி. விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிருவாக ஆணையர் / முதன்மைச் செயலாளர்  பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் முனைவர் ஜகந்நாதன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து