சமூக விலகலை கடைப்பிடிக்காத மக்கள்: அமெரிக்காவில் 4-வது வாரமாக கொரோனா இறப்பு விகிதம் அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2020      உலகம்
coronavirus 2020 08 04

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் கொரோனா இறப்பு விகிதம் தொடர்ந்து 4 வாரங்களாக அதிகரித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் கூறுகையில், “அமெரிக்காவில் 4 வாரங்களாக இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. 8,500 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். கடந்த வாரத்தை ஒப்பிடும்போது இறப்பு விகிதம் 36% அதிகரித்துள்ளது.

ஆனால், தொற்று விகிதம் 5% சரிந்துள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவில் 4,35,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா போன்ற சில மாகாணங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது என்று வெள்ளை மாளிகை மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால், மக்கள் முகக்கவசம் அணிவதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்காவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் தொடர்ந்து வெளியில் நடமாடி வருவது அதிகரித்து வருகிறது.

மதுபான விடுதிகள், ரெஸ்டாரன்ட்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவற்றில் கூடும் அமெரிக்க மக்கள், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் முகக்கவசம் அணியாமல் வருவது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக டெக்ஸாஸ், ப்ளோரிடா, கலிபோர்னியா போன்ற நகரங்களில் மீண்டும் கொரோனா நோய்ப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் 47,13,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,55,402 பேர் பலியாகி உள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து