சென்னையில் எடுத்த நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் பின்பற்றலாம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி யோசனை

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020      தமிழகம்
SP Velumani 2020 07 28

Source: provided

சென்னை : சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா  வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை மாநிலம் முழுவதும்  பின்பற்றலாம் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி யோசனை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:– 

முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1.பரிசோதனைகள் அதிகரித்தல், 2.காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், 3.வீடுகள்தோறும் சென்று வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிதல், 4.வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துதல், 5.பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கும் குடிசைப் பகுதிகளுக்கு தொண்டு நிறுவனங்களைக் கொண்டு சிறப்பு திட்டங்கள், 

6.சென்னை சமூக களப்பணித் திட்டத்தின் மூலம் வைரஸ் தொற்று குறித்த ஐ.இ.சி. மற்றும் விழிப்புணர்வு, 7.வார்டுகளில் நடவடிக்கைகளை மேற்பார்வையிட நுண்திட்டம், 8. வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்கள் வாகனங்களில் ஸ்கிரீனிங் மையங்களுக்கு அழைத்து செல்ல வாகன வசதி, 9.கட்டுப்பாட்டு அறை, 10.ஆற்றுப்படுத்துதல் அறை, 11.தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான வசதிகளை செய்தல், 12.கோவிட் பாதுகாப்பு மையங்களில் வைரஸ் தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை உட்பட தேவையான வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் வைரஸ் தொற்று சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், இதுபோன்ற வழிமுறைகள் மற்றும் சிறப்பு திட்டங்களை பிற மாவட்டங்களிலும் பின்பற்றி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தலாம்.

சென்னை மாநகராட்சியின் சார்பில் 18 ஆயிரத்து 614 படுக்கை வசதி கொண்ட கோவிட் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையைச் சார்ந்த 2,311 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களை மருத்துவமனை அல்லது கோவிட் பரிசோதனை மையங்களுக்கு அழைத்து செல்ல 289 வாகனங்கள் உள்ளன.

சென்னை சமூக களப்பணித் திட்டம் என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1,979 குடிசைப்பகுதிகளில் 92 தொண்டு நிறுவனங்களின் மூலம் 4,500 பணியாளர்களைக் கொண்டு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளின் காரணமாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேலும் உத்வேகத்துடன் பணியாற்றி கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாநிலமாக சென்னையை மாற்றிடும் வகையில் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாக துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு சிறப்பு ஒருங்கிணைப்பாளர் பங்கஜ் குமார் பன்சால், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் கே.எஸ்.பழனிச்சாமி, பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ்.பழனிச்சாமி,

இணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, இணை ஆணையாளர் (கல்வி) சங்கர்லால் குமாவாத், துணை ஆணையாளர் (பணிகள்) பி.குமாரவேல் பாண்டியன், துணை ஆணையாளர் (வருவாய்) ஜெ.மேகநாத ரெட்டி, வட்டார துணை ஆணையாளர்கள் பி.ஆகாஷ், பி.என்.ஸ்ரீதர், டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ், மண்டல சிறப்பு அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து