கொரோனா பாதிப்பிற்கு உள்ளான இந்த நேரத்திலும் பணிகள் தொய்வின்றி நடக்கிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      தமிழகம்
CM Photo 2020 08 02

Source: provided

சேலம் : கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள இந்த நேரத்திலும்கூட பணிகள் தொய்வில்லாமல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று சேலத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார். 

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே இருமுறை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் அரசு வழங்கிய ஆலோசனைகளை ஏற்று, சிறப்பான முறையில் கொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் நடைபெற்ற காரணத்தால், சேலம் மாவட்டத்தில் வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தேவையான படுக்கை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கிற காலகட்டத்தில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தங்குதடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

பருவமழை ஓரளவு நன்றாக பொழிந்துள்ள காரணத்தினால், மாநகராட்சி உட்பட, மாவட்டம் முழுவதும் குடிநீர்ப் பிரச்சனை இல்லாமல் முறையாக மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் தொய்வில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன.

தொழிற்சாலைகள் 100 சதவிகிதம் இயங்கி வருகின்றன. வேளாண் பணிகள் 100 சதவிகிதம் நடைபெற்று வருகிறது. 100 நாள் வேலை திட்டம் எவ்விதத் தடையுமில்லாமல் அரசு அனுமதியளித்த காலத்திலிருந்து தற்போதுவரை 100 சதவிகித பணியாளர்களை கொண்டு  நடைபெற்று  வருகிறது.

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள இந்த நேரத்திலும்கூட பணிகள் தொய்வில்லாமல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேபோல, நோய்த் தொற்று குறையக் குறைய, தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்துக் கொண்டிருக்கின்றது.

பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றபோது நோய்ப் பரவல் படிப்படியாகக் குறையும். இது குறித்து ஏற்கனவே அரசு,  பலமுறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஊடகம் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். உள்ளாட்சித் துறை, பொதுப்பணித் துறை மற்றும் காவல் துறை இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை பொதுமக்கள் முழுமையாகப் பின்பற்றினால் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலை எளிதாகத் தடுக்கலாம்.

இதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு மிக, மிக அவசியம். மக்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் இதைத் தடுக்க இயலாது. எனவே பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து