கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கள்ளக்குறிச்சியில் முதல்வர் எடப்பாடி இன்று ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Edappadi 2020 08 02

Source: provided

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று ஆய்வு செய்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று (திங்கட்கிழமை) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி செல்கிறார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

மேலும், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.  தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்கள், தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் இன்று இரவு கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை திரும்புகிறார்

முன்னதாக முதல்வரின் வருகையையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றது.  இப்பணிகளை மாவட்ட கலெக்டர் கிரண் குராலா, கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் அரசு அதிகாரிகளுக்கு நிகழ்ச்சி முன்னேற்பாடுகள், பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவுதமன் உள்பட பலர் உடனிருந்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ம் தேதி திண்டுக்கல் மற்றும் மதுரை நகருக்கு வந்தார்.

அங்கு முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார். அதை தொடர்ந்து மறுநாள் 7-ம் தேதி நெல்லை சென்று அங்கும் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வுகளின் போது விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தொழில் கூட்டமைப்பினர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதை தொடர்ந்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் 8-ம் தேதி நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து