ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே 3-வது முறையாக வெற்றி பெறுவது ஒன்றே நமது இலக்கு: துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

வியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020

தொடர்ந்து 3- வது முறையாக வெற்றி பெறுவது ஒன்றே அ.தி.மு.க.வின் இலக்கு என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்பது குறித்து சில நாட்களாக கருத்து நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் நேற்று பேட்டியளித்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி முதல்வர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். நேற்று முன்தினம் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்று கூறியிருந்தார். 

இந்த  நிலையில் 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 3 - வது முறையாக வெற்றி பெறுவது ஒன்றே அ.தி.மு.க.வின் இலக்கு என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

தொடர்ந்து 3 - வது முறையாக 2021-ம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள். தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து