டிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து

வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020      உலகம்

வாஷிங்டன் : டிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான டிக்-டாக் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவில் உருவாக்கப்பட்ட டிக்-டாக் செயலியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது.

சீனா, இந்த டிக்டாக் செயலி மூலம் உளவு பார்க்க முயற்சிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகிறது. எனினும், தங்கள் நிறுவன செயல்பாடுகளில் சீன அரசின் பங்கு எதுவும் இல்லை என்று டிக் டாக் நிறுவனம் தொடர்ந்து  கூறி வருகிறது.  

எனினும், இதை ஏற்க மறுத்த அமெரிக்கா,தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி   டிக் டாக் நிறுவனத்திற்கு தடை விதிக்க  அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. செப்டம்பர் மாதம் 15 -ம் தேதிக்குள்  டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்தின் பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கும் நிறைவேற்று உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார். 

தடையை தவிர்க்கும் வகையில் டிக் டாக் நிறுவனம் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க நிறுவனத்துடன் விற்பனை செய்ய, டிக் டாக்  செய்து கொள்ளும் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு நீடித்த பலன் அளிக்கும் வகையிலும் முழு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து