10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு வரலாம்: தமிழக அரசு அனுமதி

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      தமிழகம்
TN-assembly 2020 09 24

அக்டோபர் 1-ம் தேதி முதல் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர் தொடர் ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. கல்லூரிகளிலும் இறுதியாண்டு தவிர அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் பள்ளிகளில் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளைத் திறக்கவும், விருப்பமுள்ள மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 9-ம் வகுப்புக்கு மேற்பட்ட பள்ளிகளைத் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில், 

கடந்த ஆகஸ்டு 29-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட 4-வது பொதுமுடக்கத் தளர்வு ஆணையில் 50 சதவீத ஆசிரியர்களும் பிற பணியாளர்களும் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு மட்டும் இது பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 21-ம் தேதி முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளில், 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம் என்று குறிப்பிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 10 முதல் 12 வரை படிக்கும் மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடப்பட்டது.  அதைப் பரிசீலித்த மாநில அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளின் 10-12 வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வருவதற்கு அனுமதி அளிக்கிறது. வரும் அக்.1-ம் தேதி முதல் ஏற்கெனவே, மத்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி நடைமுறைப்படுத்தப்படும்.  இது நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் பொருந்தாது. மற்ற இடங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  அதில், 10 - 12-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பள்ளிக்கு அழைக்கப்பட வேண்டும்.   10 - 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒரு பிரிவினர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். முதல் பிரிவு மாணவர்கள் திங்கள், புதன், வெள்ளியன்று பள்ளிக்கு வரவழைக்கப்பட்டால், இரண்டாம் பிரிவு மாணவர்கள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பள்ளிக்கு வரவழைக்கப்பட வேண்டும். ஆசிரியர்களையும் இரண்டு பிரிவாகப் பிரித்து முதல் பிரிவு ஆசிரியர்கள் முதல் இரண்டு நாள்களும், (திங்கள், செவ்வாய்), இரண்டாவது பிரிவு ஆசிரியர்கள் அடுத்த இரண்டு நாள்களும் (புதன், வியாழன்) பணியாற்ற வேண்டும். பிறகு முதல் பிரிவு ஆசிரியர்கள் இரண்டு நாள்களுக்குப் பணியாற்ற வேண்டும். 

10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் மட்டுமே பள்ளிகளுக்கு வரலாம். ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறிந்து செல்லலாம். பெற்றோரின் அனுமதி பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும், தேவைப்படின் வழக்கமான ஆன்லைன் வகுப்புகளையும் தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து