தடுப்பு நடவடிக்கைகளை கொச்சைப் படுத்துவதா? கொரோனாவிலும் அரசியல் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

புதன்கிழமை, 28 அக்டோபர் 2020      தமிழகம்
Edappadi 2020 10 28

Source: provided

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதை போல தினந்தோறும் அறிக்கை விட்டு மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேடுவதா என்றும் தி.மு.க.விற்கு மறைமுகமாக முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

கலெக்டர்களுடன் ஆலோசனை:-

கொரோனா பரவலை தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இடையிடையே பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தாலும், பள்ளிகள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்கவும், மின்சார ரெயில்கள் இயக்கவும் இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வருகின்ற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து விவாதிப்பதற்காக நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக்காட்சி வழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, மருத்துவ நிபுணர் குழுவினருடனும், சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.

கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

கோவிட் வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அம்மாவின் அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் குறைந்து கொண்டே வருகிறது.

பிரதமர் பாராட்டு:-

உங்கள் அனைவருடைய அயராத உழைப்பின் காரணமாகத்தான் இது சாத்தியமாயிற்று. இதைக் கருத்தில் கொண்டுதான், பிரதமர், தமிழ்நாட்டை போல் பிற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என பாராட்டினார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். அதற்கென நமது நடவடிக்கைகளை மேலும் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். குறிப்பாக நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், பண்டிகை காலங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்த்தல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் இவ்வாறு பேசிய அவர் சில முக்கிய அம்சங்களையும் தெரிவித்தார்.

* எனது தலைமையில் 11 முறை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.

* 10 முறை மருத்துவ வல்லுநர்களுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

* தலைமைச் செயலர் தலைமையில் 11 முறை மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது.

* தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி, நோய்த் தொற்றின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான தளர்வுகளுடன் பொது முடக்கம் மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்தப்பட்டது.

* கோவிட் நோய் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை அரசு செலவு 7,372.25 கோடி ரூபாயும், மருத்துவம் சார்ந்த செலவினம் 1,983 கோடி ரூபாயும், நிவாரணம் சார்ந்த செலவினம் 5,389 கோடி ரூபாயும் ஆகும்.

* அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தியும், வீடு வீடாகச் சென்றும், காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்தும், ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்றவை தொடர்ந்து நடைபெற்ற காரணத்தினால் இன்றைக்கு நோய் பரவல் படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது.

* தமிழகத்தில் 201 ஆய்வகங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன, குறிப்பாக 66 அரசு ஆய்வகங்களும் மற்றும் 135 தனியார் ஆய்வகங்களும் இடம் பெற்றுள்ளன. இதுவரை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டவர்கள் 96.60 லட்சம் நபர்கள். தற்போது நாளொன்றுக்கு சுமார் 80,000 நபர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

* மாநில அளவில் கோவிட் மருத்துவமனைகளிலும், கோவிட் சிறப்பு மையங்களிலும் 1,39,098 படுக்கைகளும், இதில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 34,506 படுக்கைகளும் ஐ.சி.யூ. வசதி கொண்ட 7,666 படுக்கைகளும், 6,517 வென்டிலேட்டர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

* மிகவும் இன்றியமையாத மற்றும் உயிர்காக்கும் மருந்துகளான டொஸிலிகமாப் 400 எம்ஜி, ரெம்டெஸ்விர் 100 எம்ஜி, இனாக்சபெரின் 40 எம்ஜி போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மருந்துகள், பரிசோதனை கருவிகள், என் - 95 முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள், மும்முடி முகக்கவசங்கள், சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே இயந்திரங்கள் ஆகியவற்றை தேவையான அளவில் தொடர்ந்து கொள்முதல் செய்து நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* களப்பணியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும், கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் மக்களுக்கும், ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் இலவசமாக கொடுக்கப்பட்டு வருகிறது.

* இந்திய முறை மருத்துவ (ஆயுஸ்) சிகிச்சை – நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்காக சித்த மருந்தான கபசுர குடிநீர் பெரும்பான்மையான மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதன் விளைவாக நோய் பரவல் குறைக்கப்பட்டிருக்கிறது.

* கோவிட் நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்க, கூடுதலாக 15 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். சுமார் 2,751 மருத்துவர்கள், 6,893 செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

* சாதாரண காய்ச்சல் மற்றும் மற்ற ஏனைய நோய்களுக்கு உடனடியாக பொதுமக்கள் சிகிச்சை பெற தமிழ்நாடு முழுவதும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2,000 மினி கிளினிக் துவங்க அரசால் திட்டமிடப்பட்டு, அதற்கான இடங்களை தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த மினி கிளினிக்குகளில் நோயாளிகளை பரிசோதனை செய்யப்படுகிறது. நோய் கண்டறியப்பட்டு அந்த பகுதியிலேயே அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த்தொற்று 7.39 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டு, நோய் பரவல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. 

குறையும் நோய் தொற்று:-

கடந்த 17 நாட்களாக ஒவ்வொரு நாளும் நோய்த் தொற்றின் எண்ணிக்கை 5 ஆயிரம் நபர்களுக்கு கீழாகவே உள்ளது. கடந்த 4 நாட்களாக 3 ஆயிரம் நபர்களுக்கும் கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரத்தில் இருந்து தற்போது 30 ஆயிரம் நபர்கள் வரை குறைந்து உள்ளது.

* அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, நாட்டிலேயே சிகிச்சை முடிந்து குணமானவர்கள் (6,75,518 நபர்கள்) 94.57% மேல் உள்ள மாநிலமாகவும், மிக குறைவான, இறப்புகள் அதாவது 1.53% உள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.

* இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

* அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோய் சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகள் கடைப்பிக்கப்படுகின்றனவா? என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

* கோவிட் சிறப்பு மையங்களில் உணவு, குடிநீர், கழிப்பிட மற்றும் பிற வசதிகளை அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

* இதுவரை, 46 லட்சம் மறுமுறை உபயோகிக்கத்தக்க முகக் கவசங்கள் சென்னையில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களில், இதுவரை 4.95 கோடி முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

* ஏழைகள், சிறு தொழில் செய்வோர், சிறு வணிகம் செய்வோர் போன்றோரின் பொருளாதார நிலையை பாதுகாக்க தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களை விலையின்றி வழங்குதல், ரொக்க நிவாரணம் வழங்குதல் போன்ற பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

* கொரோனா காலத்தில் கூட, இதுவரை 55 புதிய தொழில் திட்டங்கள் தமிழ்நாட்டில் துவங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம், சுமார் 40,718 கோடி ரூபாய் முதலீடும், சுமார் 74,212 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன.

* இந்நடவடிக்கைகளால், நடப்பாண்டில் அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

* அம்மாவின் அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கைகளால், அரசின் நலத்திட்டங்கள் மக்களை பெருமளவில் சென்று சேர்ந்துள்ளது. மக்களை பொருளாதார பாதிப்பில் இருந்து பாதுகாத்து, வேலைவாய்ப்பின்மை இரண்டே மாதங்களில், ஆறில் ஒரு பங்காக சரிந்துள்ளது, தனி நபர் வருவாய் படிப்படியாய் உயர்ந்து கொரோனா சூழலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து தமிழ்நாடு விரைந்து மீண்டு வருகிறது என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

* கடந்த 12.10.2020 அன்று மாநில பேரிடர் மேலாண்மை குழுவின் பருவமழை முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது.

* தற்போது, பருவமழை காலம் தொடங்க உள்ளது. இந்த வருடம் இயல்பான அளவில் மழைப்பொழிவு இருக்கும். அனைத்து மாவட்டங்களும், குறிப்பாக கடலோர மாவட்டங்கள் பருவ மழைக்கு முன்னதாகவே நீர்நிலை உட்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக்கட்டுகள் மற்றும் ஏரிகளின் கதவுகள், மற்றும் கரைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புயல் காப்பகங்கள், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுடன் கிருமி நீக்கம் செய்து அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வண்ணம் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் காப்பகங்களை கண்டறிந்து அவற்றையும் தயார் செய்ய வேண்டும்.

* மலைப்பாங்கான மாவட்டங்களில் மண் சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும், மரங்கள் விழுந்தால் அகற்றுவதற்கு தேவையான உபகரணங்களை இருப்பில் வைத்தும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* நாம் முன்னரே திட்டமிட்டு நீர்நிலைகளை தூர் வாரியது, ஆழப்படுத்தியது, வாய்க்கால்களை சீரமைத்தது போன்ற பணிகளினால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு 4 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்ட ஆட்சியர்கள், நெல் கொள்முதல் நிலையங்களை விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக தொடங்க வேண்டும். அதேபோல், நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்டு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை பாதுகாக்க, போதுமான அளவு தார்பாய்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

* கோயம்பேடு வளாகத்தில் உணவு தானிய விற்பனை அங்காடிகளும், மொத்த காய்கறி விற்பனை அங்காடிகளும் திறக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகின்றன. தற்போது சுமார் 7,500 வியாபாரிகள் தினமும் இந்த அங்காடியை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு நோய்ப் பரவல் தடுப்பை உறுதி செய்ய தினசரி கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

தற்காலிக இடத்தில் செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம், பழம் மற்றும் காய்கறி சில்லரை வியாபாரக் கடைகளை திறப்பதற்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் அங்காடியைச் சார்ந்துள்ள அனைவரது வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டும், அதேநேரத்தில் பொதுமக்களுக்கு குறைவான விலையில் காய்கறி, கனிகள் கிடைத்திட ஏதுவாகவும், சம்பந்தப்பட்ட அனைவரையும் கலந்தாலோசித்து, கோரிக்கை குறித்து உரிய நேரத்தில் அரசு முடிவெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்களெல்லாம் அன்றைக்கு அண்டை மாநிலத்தை ஒப்பிட்டு குறிப்பிட்டார்கள். தமிழகத்தில் தளர்வுகள் இல்லாமல் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. இதனால் தொழில்கள் முடங்குகின்றன, பல்வேறு பணிகள் முடங்குகின்றன என்று திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியுடன் செய்தியெல்லாம் வெளியிட்டார்கள். இன்றைக்கு நிலைமை என்ன? அம்மாவின் அரசு சரியான நடவடிக்கை எடுத்ததன் காரணமாக இன்றைக்கு நோய்ப் பரவல் படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. ஆனால் அண்டை மாநிலத்தில், அவர்கள் குறிப்பிடுகின்ற மாநிலங்களிலெல்லாம் இன்றையதினம் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவல் இருந்து வருகிறது.

அரசியல் ஆதாயம் தேடுவதா?

இது ஒரு புதிய நோய். தமிழ்நாடு அரசு அதை கட்டுப்படுத்தத் தவறியதைப் போலவும் தினந்தோறும் அறிக்கை விட்டு மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேடுவதை இனிமேல் நிறுத்திக் கொள்ள வேண்டும். வேண்டுமென்றே கொச்சைப்படுத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள். அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த கூடுதல் தலைமைச் செயலாளர்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள், முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ளவர்கள், அரசு செயலாளர்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள்ஆகியோரது கருத்துக்களைக் கேட்டுத்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாகத்தான் தமிழகத்தில் நோய்ப் பரவல் குறைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

* தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதால், பொதுமக்கள் பொதுஇடங்களில் கூடுவதை தொடர்ந்து கண்காணித்து, தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வினை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து