புதுடெல்லி : வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு மோசமாக உள்ளது என குறை கூறி 2017-ம் ஆண்டு வீடியோ வெளியிட்டவர் எல்லை பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர். அந்த வீடியோவை தொடர்ந்து அவர் பாதுகாப்பு படையில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிட தேஜ் பகதூர் முதலில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார். அந்த மனு தேர்தல் ஆணைய அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட தேஜ் பகதூர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டத்தை எதிர்த்தும், பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்தும் அலகாபாத் நீதிமன்றத்தில் தேஜ் பகதூர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் தேஜ் பகதூரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது சரிதான் என கூறி மனுவை தள்ளுபடி செய்தது. அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேஜ் பகதூர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அந்த மனு மீதான விசாரணை முடிவுற்ற நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரிதான் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. மேலும், வாரணாசியில் பிரதமர் மோடி பெற்ற வெற்றியை எதிர்த்து தேஜ் பகதூர் தாக்கல் செய்த மனுவையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.