சென்னை : திட்டமிட்டபடி டிசம்பர் 2-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக 7 மாதங்களாகக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே மத்திய, மாநில அரசுகள் படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இதற்கிடையே பல்கலைக்கழக மானியக் குழு, கல்லூரிகள் தொடங்கி வகுப்புகள் நடைபெறுவதற்கான கால அட்டவணையைக் கடந்த மாதம் வெளியிட்டது.
இதன்படி டிசம்பர் 2-ம் தேதியன்று முதுகலை அறிவியல், தொழில்நுட்பப் பிரிவு இறுதியாண்டு மாணவர்களுக்குக் கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார்.
இதற்கிடையே நிவர் புயல் மற்றும் மழை காரணமாகக் கல்லூரிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், திட்டமிட்டபடி டிசம்பர் 2 -ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., எம்.எஸ்.சி. ஆகிய முதுகலைப் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்குத் திட்டமிட்டபடி டிசம்பர் 2-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும். அவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தொற்று குறித்த அச்சம் இல்லை.
அதேபோல செய்முறை வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த இயலாது. இதனால் திட்டமிட்டபடி டிசம்பர் 2-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும். எனினும் மீண்டும் புயல், அதீத மழை ஆகியவை ஏற்பட்டால், கல்லூரிகள் திறப்பைத் தள்ளி வைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று கே.பி.அன்பழகன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது