விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்யாதீர்கள் : மத்திய அமைச்சர் தோமர் அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 28 நவம்பர் 2020      இந்தியா
Narendrasingh-Tomar 2020 11

Source: provided

புதுடெல்லி : விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அறிவுறுத்தி உள்ளார். 

வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் மத்திய அரசு சமீபத்தில் 3 சட்டங்களை நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அழித்து விடும் எனவும், விவசாயம் கார்ப்பரேட் வசம் சென்று விடும் எனவும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதைப் போல விவசாயிகள் மத்தியிலும் இந்த சட்டங்களுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

பஞ்சாப் விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லி நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யக் கோரியும் நடந்த இந்த பேரணியில் 30-க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் டிராக்டர்கள், லாரிகள், பேருந்துகள் போன்ற வாகனங்களில் டெல்லியை நோக்கி அலையலையாக பங்கேற்க செல்கின்றனர். ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இது குறித்து வேளாண்த்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:- 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராகவுள்ளது. டிசம்பர் 3-ம் தேதி பேச்சுவார்த்தைக்காக விவசாய சங்கங்களை அழைத்துள்ளோம். அவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன். விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து