சென்னை : தஞ்சை அருகே நிகழ்ந்த பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திருவையாறு வட்டம், நடுக்காவேரி சரகம், வரகூர் மெயின் ரோடு அருகே, மின் கம்பி மீது உரசி, மின்சாரம் தாக்கியதில், பேருந்தில் பயணம் செய்த, கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் கணேசன், வரகூரைச் சேர்ந்த ராமாமிர்தம் என்பவரின் மகன் கல்யாணராமன், மணிகண்டன் என்பரின் மனைவி கௌசல்யா மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேலு என்பவரின் மகன் நடராஜன் ஆகிய நான்கு நபர்களும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்து குறித்து அறிந்தவுடம் மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்து கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன்.
இந்த விபத்தில் மூன்று நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/-ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.