நாடு முழுவதும் 2.24 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டது- மத்திய அரசு தகவல்

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      இந்தியா
Corona-vaccine 2020 11 07

Source: provided

புதுடெல்லி:  இந்தியாவில் கொரோனாவை கொன்றொழிப்பதற்காக நேற்று முன்தினம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உலகிலேயே மாபெரும் இந்த தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

இதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவேக்சின் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளும் நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

இதில் முதற்கட்டமாக ஒரு கோடி மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுமார் 2 கோடி முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அவர்களை தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பின்னர் 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசி போடப்படும். 

அந்த வகையில் கடந்த 2 நாட்களில் நாடு முழுவதும் 2.24 லட்சத்துக்கு அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. 

இது தொடர்பாக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

ஜனவரி 17-ந் தேதி (நேற்று) வரை நாடு முழுவதும் 2 லட்சத்து 24 ஆயிரத்து 301 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் முதல் நாளில் மட்டும் 2,07,229 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 

இன்று (நேற்று) ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆந்திரா, அருணாசல பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மணிப்பூர் ஆகிய 6 மாநிலங்களில் மட்டும் தடுப்பூசி போடும் பணிகள் நடந்தன. அந்தவகையில் 553 அமர்வுகளில் மொத்தம் 17,072 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

இந்த 2 நாட்களில் வெறும் 447 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டபின் பக்க விளைவுகள் ஏற்பட்டன. அதில் 3 பேருக்கு மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்ற அனைவருக்கும் லேசான காய்ச்சல், தலைவலி, குமட்டல் போன்ற பிரச்சினைகள்தான் ஏற்பட்டன. 

இந்த தடுப்பூசி திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து சீரமைப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இன்று (நேற்று) ஆய்வு கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. 

இவ்வாறு மனோகர் அக்னானி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து