சீன செயலிகளுக்கு தடை நீடிப்பு

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021
25 ARASU 18

புதுடெல்லி.ஜன.26. சீனாவின், 'டிக்  டாக்' உட்பட, 'மொபைல் ஆப்' நிறுவனங்களின் விளக்கத்தை பரிசீலனை செய்த மத்திய அரசு, அவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

சீனாவின் டிக்  டாக் உட்பட, 59 'மொபைல் ஆப்' எனப்படும் செயலிகளுக்கு கடந்த ஜூனில், நம் நாட்டில் தடை விதிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 'மொபைல் கேம்' உட்பட சீனாவின் மேலும் 118 செயலிகள் தடை செய்யப்பட்டன.

இதையடுத்து சீன நிறுவனங்கள், தங்கள் தரப்பு விளக்கங்களை மத்திய அரசுக்கு அளித்தன. அவற்றை பரிசீலனை செய்த நிலையில், டிக்  டாக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.

இதுகுறித்து, டிக்  டாக் நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:

இந்திய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப, எங்கள் செயல்பாடுகளை மாற்ற, தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அரசின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பணிகள் தொடர்கின்றன. எங்கள் மொபைல் ஆப்களை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, முன்னுரிமை அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து