முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இன்று குடியரசு தின விழா: கவர்னர் பன்வாரிலால் கொடி ஏற்றுகிறார்

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      தமிழகம்

சென்னை, ஜன. 26. சென்னை மெரினா கடற்கரையில் இன்று  நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொடி ஏற்றி வைக்கிறார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பங்கேற்கிறார்.

தமிழக அரசு சார்பில், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.  விழாவிற்கு வரும் முதல்வர்  எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலாளர் சண்முகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்.

அதைத் தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்.  விழா மேடைக்கு அருகே நடப்பட்டுள்ள உயரமான கம்பத்தில் காலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றுகிறார். அப்போது, விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வந்து, அந்த பகுதியில் மலர்தூவும்.

அதைத்தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப் படையினரின் அணிவகுப்பு நடத்தப்படும். பின்னர், போலீஸ் படைகள், கடலோர பாதுகாப்பு குழு, ஆண், பெண் தமிழ்நாடு கமாண்டோ படை, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையின் அணிவகுப்பு நடைபெறுகிறது. அதை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பார்வையிட்டு ஏற்றுக்கொள்வார்.

அதை தொடர்ந்து, வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், கள்ளச்சாராயத்தை தடுப்பதில் சீரிய பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். இந்த விழாவையொட்டி, தமிழக அரசு துறைகள் சார்பாக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடத்தப்படும். இதில் சிறப்பாக செயல்பட்ட துறைக்கு பரிசு வழங்கப்படும். 

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் தனபால், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள், அமைச்சர்கள், அரசு செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பல நாட்டு தூதரக அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். 

இந்த ஆண்டு கொரோனா தொற்று நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாகவும் மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் சால்வை அணிவித்து உரிய மரியாதை அளிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  கூட்டத்தை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோர் விழாவினை நேரில் காண வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, வானொலியில் கண்டு, கேட்டு மகிழுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து