முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீனிக்ஸ் பறவை வடிவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்: மெரீனா கடற்கரையில் தொண்டர்கள், பொதுமக்கள் குவிந்தனர்

புதன்கிழமை, 27 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவை வடிவில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவை முன்னிட்டு மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.

கடற்கரை முழுவதும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன. முதலமைச்சர் அழைப்பை ஏற்று அலைஅலையாக குடும்பத்துடன் வந்து மக்களும் தொண்டர்களும் விழாவில் பங்கேற்றனர்.

தமிழக முதல்வராக 6 முறை பதவி வகித்தவர் ஜெயலலிதா. இந்தியாவிலேயே நீண்ட காலம் பதவி வகித்த பெண் முதல்வர்களில் 2-வது நபர் ஆவார்.

29 ஆண்டு காலம் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருந்தவர். எம்.ஜி.ஆர். மறைந்த போது 18 லட்சம் உறுப்பினர்களை கொண்ட அ.தி.மு.க. இயக்கத்தை 1½ கோடி தொண்டர்கள் உள்ள இயக்கமாக மாற்றி காட்டியவர். தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர். சர்ச் பார்க் கான்வென்ட்டில் படித்த போது படிப்பு, விளையாட்டு போட்டிகளில் முதலிடம் வகித்தார். ஆங்கிலம் உள்பட ஏழு மொழிகளில் சரளமாக பேச தெரிந்தவர். சினிமாவிலும் வெற்றி கொடி நாட்டியவர், இரும்பு பெண்மணி. எடுத்த காரியத்தை முடித்து காட்டும் துணிச்சல் பெண்மணி. ‘அம்மா’ என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்.

1948–ம் ஆண்டு பிப்ரவரி 24 –ந் தேதி ஜெயலலிதா பிறந்தார். 2 வயதிலேயே தந்தையை இழந்தவர். 15 வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கினார்.

ஆட்சியில் இருந்த கட்சி தொடர்ந்து மீண்டும் ஆட்சி செய்யும் நிலையை 32 ஆண்டுகளுக்குப் பின் ஏற்படுத்தியவர். மாநில கட்சி ஒன்று நாடாளுமன்றத்தில் 3–வது பெரிய கட்சியாக இடம் பெறும் நிலையையும் உருவாக்கியவர். உலகம் போற்றும் சாதனைகளை செய்தவர். எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் அந்த தடை, சோதனைகளை தாண்டி வெற்றி கண்டவர். 

2016–ம் ஆண்டு டிசம்பர் 5–ந் தேதி ஜெயலலிதா காலமானார். அவரது உடல் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அந்த இடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவில் மிக பிரமாண்டமாக அனைவரையும் கவரும் வகையில் அதிசயிக்கத்தக்க வகையில் ரூ.80 கோடியில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவும் அமைக்கப்பட்டிருக்கிறது. உலகத் தரத்தில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

பொதுப்பணித்துறை சார்பில் இந்த நினைவிடம் கட்டப்பட்டது. சுமார் 2 ஆண்டு காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த நினைவிடத்தை நேற்று காலை 11 மணி அளவில் திறந்து வைத்தார். முதலில் நினைவிட கல்வெட்டை திறந்து வைத்தார். 

அதன் பின்பு நினைவிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது அங்கு குவிந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ‘புரட்சி தலைவி அம்மா புகழ் ஓங்குக’ என்று குரல் எழுப்பினார்கள். கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

நினைவிடத்தை திறந்து வைத்து ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் மலர் வளையம் வைத்து வணங்கினார்கள். அங்கு ஜெயலலிதாவின் ஆள் உயர பிரமாண்ட படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த படத்தை அனைவரும் தொட்டு வணங்கினார்கள். அங்கு அணையா விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அதனை வணங்கினார்கள். நினைவிடத்தில் மலர் தூவி கீழே விழுந்து வணங்கினார்கள்.

இதனை தொடர்ந்து தலைமை செயலாளர் க.சண்முகம், அவைத்தலைவர் மதுசூதனன், அனைத்து அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என அனைவரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினார்கள்.

அங்கிருந்து நேராக அருகில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு வந்தனர். அங்கு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 11.22 மணி அளவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் ஆகியோர் மலர் வளையம் வைத்து வணங்கினார்கள். தொடர்ந்து அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர்கள், நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

எம்.ஜி.ஆர். நினைவிட வளாக நுழைவுவாயில் அருகே சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு முதலமைச்சரும், மற்றவர்களும் நடந்தே வந்தனர்.

பின்னர் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிட கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்தார்.

பின்னர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். 

எதிரிகளை வென்று வெற்றிக்கனியை சமர்ப்பிக்க எங்களுக்கு அருள்தாருங்கள் அம்மா என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அவர் பேசும்போது, ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி புகழாரம் சூட்டினார்.

அனைவருக்கும் ‘ரோல் மாடலாக’ அம்மா திகழ்ந்தார். நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அம்மாவின் ஆட்சி அமைவதே அம்மாவுக்கு நாம் செலுத்தும் நன்றி கடன் என்று முதலமைச்சர் கூறினார்.

இரவு பகல் பாராது அம்மாவின் சாதனைகள், ஆட்சியின் சாதனைகளை சொல்லி அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றுவோம். வெற்றி காண்போம் என்றும் கூறினார்.

இறுதியாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் மகேசன் காசிராஜன் நன்றி கூறினார்.

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சிகள் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு அனைவரும் குடும்பத்தோடு வரவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் தொண்டர்களும், பொதுமக்களும் லட்சக்கணக்கில் குவிந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து