ரஜினியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி புதிய கட்சி தொடங்குகிறார்

வியாழக்கிழமை, 28 ஜனவரி 2021      தமிழகம்
arjun-2021-01-28

ரஜினியால் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தி 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க புதிய படையுடன் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக அர்ஜுனமூர்த்தி கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியை தொடங்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்ட போது அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டவர் அர்ஜுனமூர்த்தி. பின்னர் உடல்நலனை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்த பிறகு அர்ஜுன மூர்த்தி ஒதுங்கியே இருந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் ரஜினிகாந்தின் ஆசிர்வாதத்தோடு அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம் என்றும், ரஜினியின் ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்து இருந்தார். 

இந்தநிலையில் புதிய கட்சியை அவர் தொடங்க உள்ளார். இதுதொடர்பாக அர்ஜுனமூர்த்தி அளித்த பேட்டியில்,  2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க புதிய படையுடன் புதிய கட்சியை தொடங்க உள்ளேன். என்னுடன் லட்சக்கணக்கான இளைஞர்களும், பல முக்கிய பிரமுகர்களும் உள்ளனர்.  ரஜினி தொடங்க இருந்த கட்சிக்காக ஓராண்டுக்கு மேல் அமைத்த யூகங்களையும், திட்டங்களையும் புதிய கட்சிக்காக பயன்படுத்தப் போகிறோம். 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம்.  ரஜினிகாந்தை சந்தித்து கட்சி தொடங்கும் விசயத்தை கூறினேன். அதனை ஆர்வமுடன் கேட்ட அவர் சிரித்த முகத்தோடு ஆசிர்வாதம் வழங்கினார். இருப்பினும் ரஜினிகாந்தின் படம், பெயர் ஆகியவைகளை பயன்படுத்த மாட்டோம்.  தமிழகத்தில் களம் இறங்கி நிச்சயம் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்.  அதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம்.  மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்களுடன் கைகோர்க்க தயாராக உள்ளனர்.  இவ்வாறு அர்ஜுன மூர்த்தி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து