கொரோனா தொடர்ந்து அதிகரிப்பு : மராட்டியத்தில் 3 மாவட்டங்களில் மீண்டும் பொது முடக்கம் அமல்

திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2021      இந்தியா
Maharattra-2021-02-22

Source: provided

மும்பை : நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்து வந்தது போலவே மராட்டிய மாநிலத்திலும் நோய் தொற்று கடந்த 3 மாதகாலமாக குறைந்து காணப்பட்டது.

ஆனால் இப்போது திடீரென கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் புதிதாக 6,971 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கனவே மராட்டியத்தில் இதுவரை 21 லட்சத்து 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 51 ஆயிரத்து 788 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 52 ஆயிரத்து 956 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா திடீரென தொடர்ந்து மீண்டும் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த மாநில அரசும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது அமராவதி, அகோலா, யவத்மா ஆகிய 3 மாவட்டங்களில் நோய் தொற்று மிக அதிகரித்து வருகிறது.

எனவே 3 மாவட்டங்களிலும் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28-ந்தேதி வரை இந்த பொதுமுடக்கம் நீடிக்கும் என்று கூறி உள்ளனர். அதன்பிறகும் கட்டுக்குள் வரவில்லை என்றால் மேலும் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். முன் அனுமதி பெறவேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இதேபோல புனே, நாசிக் ஆகிய ஊர்களில் இரவு 11 மணியில் இருந்து காலை 6 மணிவரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பத்திரிகை வினியோகம் செய்பவர்கள், காய்கறி வாங்கச்செல்லும் வியாபாரிகள் போன்றவர்களை தவிர யாரும் வெளியே நடமாடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து