உற்பத்தியை குறைக்காதீர்கள்: எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிடம் இந்தியா வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2021      இந்தியா
India-2021-02-22

Source: provided

புதுடெல்லி : கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவால் இந்தியாவில் எரிபொருட்கள் விலை உச்சத்தை தொட்டுள்ளது. எனவே உற்பத்தியை குறைக்க வேண்டாம் என எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

மும்பையில் எப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல் 97 ரூபாயை எட்டியுள்ளது. டீசல் 88 ரூபாயை கடந்தது. கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எரிபொருள் தேவை பெருமளவு குறைந்தது. இதனால் எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்தன. அந்த முடிவை அப்போது இந்தியா ஆதரித்தது. ஆனால் தற்போது தேவை அதிகரித்திருப்பதால் உற்பத்தியை குறைக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து விளக்கிய பெட்ரோலிய அமைச்சர் மாநிலங்களும் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை அதிகரித்துள்ளன. அதனால் விலை உயர்வுக்கு மத்திய அரசை விமர்சிப்பது தவறு. சர்வதேச சந்தை எரிபொருள் உற்பத்தியை குறைத்திருப்பதும், அதிக லாபத்திற்காக எண்ணெய் உற்பத்தி நாடுகளும் அதை செய்வதும் தான் எரிபொருள் விலை உயர்வுக்கான காரணங்கள். இது எரிபொருளை வாங்கும் நாடுகளை பாதிக்கிறது. ஒபெக் எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பிடம் எரிபொருள் உற்பத்தியை குறைக்க வேண்டாம் என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. என்றார். 

இன்னும் சில மாதங்களில் தேர்தலைச் சந்திக்க உள்ள அசாம், மேற்கு வங்க மாநில அரசுகள் மாநில வரியை குறைத்துள்ளன. அசாம் அரசு லிட்டருக்கு ரூ.5-ம், மேற்கு வங்க அரசு ரூ.1-ம் குறைத்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து